இந்தியா ஃபிரான்ஸ் கூட்டு பயிற்சி: பிரான்ஸில் இந்திய போர்க்கப்பல் மற்றும் வேட்டை விமானம் !!

கடந்த செப்டம்பர் இரண்டு முதல் நான்காம் தேதி வரையான மூன்று நாட்களில் இந்திய கடற்படை மற்றும் பிரான்ஸ் கடற்படை இடையேயான வருடாந்திர வருணா கடற்படை கூட்டுப் பயிற்சிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு இந்த வருடாந்திர கூட்டு பயிற்சிகள் சுமார் 22 ஆவது முறையாக நடத்தப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் ஒரு போர்க்கப்பலும் அதன் ஹெலிகாப்டரும் மற்றும் இந்தியாவிலிருந்து சென்ற ஒரு வேட்டை விமானமும் பங்கு பெற்றுள்ளன.

மத்திய தரைக் கடல் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த போர் பயிற்சியில் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்களில் ஒன்றான INS TABAR ஐ.என்.எஸ். தாபார் அதில் உள்ள சேத்தக் ஹெலிகாப்டர் மற்றும் நம் தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற Boeing போயிங் P8I தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானம் ஆகியவை கலந்து கொண்டன.

அதேபோல பிரான்ஸ் நாட்டு கடற்படையின் சார்பில் முன்னணி போர்க்கப்பலான FS Provence ப்ராவென்ஸ் எனும் Acquitaine அக்யிடெய்ன் ரக FREMM வகை பல திறன் ஃப்ரிகேட் கப்பலும், அணுசக்தியால் இயங்கும் Suffren ரகத்தை சேர்ந்த அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களில் முதலாவதான S635 Suffren, MB – 339 இலகுரக போர் விமானங்கள், Dauphin மற்றும் NH – 90 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இந்த கூட்டு பயிற்சிகளில் கலந்து கொண்டன.

இந்த பயிற்சிகளில் இரு தரப்பினரும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் முறை, கடல் சார் நகர்வுகள், வான் பாதுகாப்பு போர் முறை மற்றும் ஆயுதப் பயன்பாட்டு பயிற்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொண்டனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த வருணா வருடாந்திர கடற்படை கூட்டு பயிற்சிகள் தற்போது 22 வது ஆண்டு எட்டியுள்ளன. இத்தனை ஆண்டு காலகட்டத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு கடற்படைகள் இடையேயான உறவுகளின் முதுகெலும்பாக இருந்து கூட்டு நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுவாக்கி உள்ளது என்றால் மிகையல்ல.

இந்த இருதரப்பு வருணா கடற்படை கூட்டு பயிற்சிகள் பற்றி இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய துறை கடல் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த 22 ஆவது வருணா இந்தியா பிரான்ஸ் கடற்படை கூட்டு பயிற்சிகள் இந்திய பெருங்கடல் பகுதிக்கு அப்பால் நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய கடற்படையின் உறுதியினை வெளிப்படுத்துவதில் முக்கியமான படிக்கல் எனவும்,

இந்த வருணா வருடாந்திர இருதரப்பு கூட்டுப் பயிற்சிகள் இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகள் ஒத்துழைப்பு மிக்க ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த இருதரப்பு உறுதியினை வெளிப்படுத்துவதாகவும் மேலும் இதுபோன்று இந்திய கடற்படை உலக அளவில் பல்வேறு கடற்படைகளுடன் தனது உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.