8 அதிநவீன போர் கப்பல்களை கட்டுவதற்கு அனுமதி எதிர்பார்க்கும் இந்திய கடற்படை !!

இந்திய கடற்படை விரைவில் பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன்பு திட்டம் 18 Project 18 என்ற திட்டத்தின் கீழ் 8 முதல் 10 அதிநவீன நாசகாரி போர்க்கப்பல்களை கட்டுவதற்கான அனுமதியை எதிர்பார்த்து ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தத் திட்டம் 18 கீழ் கட்டப்படும் நாசகாரி போர்க்கப்பல்கள் தான் இந்திய கடற்படையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நாசகாரி கப்பல்களாக இருக்கும். மேலும் இவற்றில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களும் பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன் டிரோண்களை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கடந்தாண்டு இந்திய கடற்படை இந்த கப்பல் திட்டத்தை பற்றி வெளியிட்ட ஒரு சிறிய காணொளி இந்த கப்பல்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை நமக்கு அளிக்கிறது. அந்த வகையில் இந்த கப்பலின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் மொத்தமாக சேர்த்து 144 ஏவுகணை ஏவும் செல்கள் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் ரேடார் கோபுரத்திற்கு பின்னால் 8 சரிவான ஏவு குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும் இவை பிரம்மாஸ் இரண்டு ஏவுகணைகளுக்கானது என கூறப்படுகிறது.

மேலும் கூடுதலாக இந்த கப்பல்களில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட அதிநவீன MRSAM Medium range surface to air missile இடைத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் இருக்கும் எனவும் இவை மாக் 7 அதாவது மணிக்கு 8640 கிலோமீட்டர் வேகத்தில் கப்பலை நோக்கி வரும் கப்பல் எதிர்ப்பு பலஸ்டிக் ஏவுகணைகளை கூட விட்டு வீழ்த்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய கடற்படையில் வரிசையாக இணைந்து வரும் இருப்பதிலேயே அதிநவீனமான மற்றும் பெரிய புத்தம் புதிய விசாகப்பட்டினம் ரகத்தை சேர்ந்த P15B – Project 15 Bravo திட்டம் 15 பிராவோவின் கீழ் கட்டப்பட்ட நாசகாரி கப்பல்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளாக மேல் குறிப்பிட்ட திட்டம் 18 என் கீழ்கட்டப்படும் நாசகாரி கப்பல்கள் அமையும். மேலும் இந்த போர்க்கப்பல்கள் இந்தியாவின் கடல் படை திறனை பல மடங்கு வலுப்படுத்தியும் பாதுகாப்புத் திறன்களை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பது கூடுதல் தகவலாகும்.