25 நீர்மூழ்கி கப்பல்களுக்காக சுமார் 2.62 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய உள்ள இந்திய அரசு !!

குளோபல் டேட்டா Globaldata எனப்படும் சர்வதேச பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா தனது நீர்மூழ்கி கப்பல் படை பிரிவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதற்காக சுமார் 31.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்திய அரசு செலவிட உள்ளதாகவும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நீர்மூழ்கி படைப்பிரிவு வலுவாக்கும் திட்டத்தில் பல்வேறு வகையான நீர் மூழ்கிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் அதில் மிக முக்கியமான முதன்மையான இடத்தை பிடித்திருப்பது SSBN எனப்படும் அணுசக்தியால் இயங்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களாகும் அந்த வகையில் இனியும் இரண்டு அரிஹந்த் ரக நீர்முழ்கி கப்பல்களும் அதைவிட பெரிய S5 ரகத்தை சேர்ந்த ஆறு நீர்மூழ்கி கப்பல்களும் இந்தியாவால் கட்டப்பட உள்ளன.

இந்த நீர்மூழ்கி கப்பல்களில் மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் துணை அமைப்புகள் ஆகியவையும் கூடவே அதிநவீன ஸ்டெல்த் திறன்களும் உட்பகுத்தப்படும். இது தவிர இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் சுமார் 6000 கிலோ மீட்டர் தொலைவு வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும். K-5 மற்றும் சுமார் 8000 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடிய K-6 போன்ற SLBM Submarine Launched Ballistic Missiles நீர்மூழ்கிலிருந்து தேவைப்படும் பலிஸ்டிக் ஏவுகணைகளை ஆகியவற்றை சுமக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மேலும் P75i Project 75 India திட்டம் 75 இந்தியாவின் கீழ் ஆறு அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களும் P76 Project 76 திட்டம் 76 இன் கீழ் மேலும் 6 அடுத்த தலைமுறை நீர் மூழ்கி கப்பல்களையும் இந்திய கடற்படைக்காக கட்டமைக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த 12 நீர்மூழ்கி கப்பல்களும் அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களைக் கொண்ட SSK ரகத்தை சேர்ந்த டீசல் எலெக்ட்ரிக் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களாக இருக்கும், இவற்றைத் தொடர்ந்து P77 Project 77 திட்டம் 77 இன் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இரண்டு அதிநவீன அடுத்த தலைமுறை SSN ரகத்தை சேர்ந்த அணுசக்தியால் இயங்கக்கூடிய அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படைக்காக கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மூன்று திட்டங்களுக்கு முன்னதாக இந்திய கடற்படைக்காக ஏற்கனவே இந்திய கடற்படையில் சேவையில் உள்ள SCORPENE ரகம் என பிரான்சில் அறியப்படும் இந்தியாவில் Kalvari கல்வரி ரகம் என அழைக்கப்படும் டீசல் எலெக்ட்ரிக் நீர் மூழ்கி கப்பல்களில் மேலும் மூன்றை இந்தியாவிலேயே கட்டமைத்து இந்திய கடற்படையில் இணைப்பதற்கான திட்டமும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் உள்ளது.

இந்தியாவின் இந்த நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வலுவான கடற்படையை உருவாக்குவதற்கான இந்திய அரசின் நோக்கத்தையும் மேலும் இந்தியாவின் அணு ஆயுத முப்பரிமான தாக்குதல் திறன்களில் மிகவும் முக்கியமான கடல்சார் அணு ஆயுத தாக்குதல் திறன்களை பல மடங்கு நவீனப்படுத்துவது மற்றும் வலுப்படுத்துவதற்கான நோக்கத்தையும் தெள்ளத் தெளிவாக காண்பிக்கிறது. இப்படி இந்தியாவின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதற்கும் கடல் சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மிக நவீனமான திறன்மிக்க நீர்மூழ்கி கப்பல் படை தேவை என்றால் அது மிகையாகாது.