ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம் !!
நேற்று இரவு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு மிக் 29 Mikhoyan Gurevich Mig – 29 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படை இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் நேற்று இரவு வழக்கமான முறையில் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29 போர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதைத்தொடர்ந்து விமானி விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் ஆகவே விமானத்திலிருந்து வெளியேறி பாராசூட் மூலம் விமானி பத்திரமாக தரையிறங்கியதாகவும் போர் விமானம் தரையில் மோதி விபத்துக்கு உள்ளானதாகவும் அதைத் தொடர்ந்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பார்மர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர மீனா ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் நேற்று இரவு இந்திய விமான படை போர் விமானம் பார்மர் செக்டாரில் விபத்தை சந்தித்ததாகவும் மக்கள் வசிக்காத ஆள் அரவமற்ற பகுதியில் விபத்துக்குள்ளானதால் எந்தவித உயிர் சேதமோ பொருட்கள் ஏற்படவில்லை எனவும் அதே நேரத்தில் விமான விபத்துக்குள்ளான பகுதி மிகவும் கரடு முரடான நிலப்பரப்பை கொண்டுள்ளதால் அந்த பகுதிக்கு தீயணைப்பு படை வீரர்கள் செல்வதில் சிக்கல் மற்றும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் நான்காம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே நிஃபாத் தாலுகாவில் உள்ள ஷிரஸ்கோவன் கிராமத்திற்கு அருகே மதியம் 1.20 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக இதில் பொது மக்களுக்கு அல்லது விமானத்தை இயக்கிய 2 விமானிகளுக்கோ உயிர் சேதத்தை ஏற்படுத்தவில்லை.
அதேபோல கடந்த மார்ச் மாதம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ் இலகுரக போர் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய் சால்மர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இஞ்சின் செயலிழந்து விபத்தை சந்தித்தது இதிலும் அதிர்ஷ்டவசமாக விமானத்தை இயக்கிய விமானி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது ஆகும்.