10 ராணுவ கண்டோன்மென்ட்களை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு !!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள கொள்கை முடிவின்படி இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவின் படி இந்திய தரைப்படை நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள 10 கண்டோன்மென்ட் பகுதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்பான சிவில் நிர்வாக அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் கிளமன்ட் டவுன், மகாராஷ்டிரா மாநிலம் தியோலாலி, ராஜஸ்தான் மாநிலம் நசீராபாத் மற்றும் அஜ்மீர், உத்தரப்பிரதேச மாநிலம் பபினா, ஷாஜகான்பூர், மதுரா மற்றும் ஃபதேகர், ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய தரைப்படைக்கு சொந்தமான கண்டொன்மென்ட் பகுதிகளை அந்தப் பகுதிகளுக்கு பொறுப்பான உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

மேல் குறிப்பிடப்பட்ட 10 கண்டோன்மென்ட் பகுதிகளும் இந்திய தரைப்படையின் மத்திய கட்டளையகம், தெற்கு கட்டளையகம் மற்றும் தென்மேற்கு கட்டளையகம் ஆகியவற்றின் கீழ் இயங்கி வருகின்றன ஆகவே இந்த மூன்று கட்டளையகங்களும் தற்போது உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் ஜார்கண்ட் மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இந்த நிர்வாக மாற்ற செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த கண்டோன்மென்ட் பகுதிகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டன அதாவது இவை ராணுவத்தில் கட்டுப்பாட்டில் உள்ள சிறு நகரங்களாகும் இங்கு பொதுமக்களும் ராணுவத்தினரும் தங்குவதற்கான வசதிகள் இருக்கும் ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதிலாக ராணுவம் தான் இதன் நிர்வாகங்களை கவனிக்கும் இதன் காரணமாகவே இந்த பகுதிகளில் சிறப்பான சாலை குடிநீர் மின்சார வசதிகள் மற்றும் இயற்கையோடு ஒன்றிய பச்சை பசேல் என்ற சுற்றுச்சூழல் நிரம்ப காணப்படும் ஆனால் காலப்போக்கில் நகரங்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இடபற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு மிக அருகே வசிக்கின்றனர் இதன் காரணமாக கண்டோன்மென்ட் சாலைகளை போக்குவரத்திற்கு பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உரசல்கள் உள்ளன.

தற்போது இந்திய அரசு இந்த பிரிட்டிஷ் ஆட்சி கால கட்ட பழக்கங்களை நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக கூறி நாட்டில் உள்ள அனைத்து கண்டோன்மென்ட் பகுதிகளையும் சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்து கடந்த மார்ச் மாதமே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான வழிமுறைகளை நெறிமுறைகளை அடங்கிய அறிவிக்கையை வெளியிட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் யோல் பகுதியில் அமைந்துள்ள இந்திய தரைப்படையின் 9 போர் படை பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள யோல் கன்டோன்மென்ட் பகுதி யோல் உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து தான் தற்போது இந்த 10 கண்டோன்மென்ட் பகுதிகளையும் அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்பான உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கண்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள சாலை மின்சார வசதிகள் தெருவிளக்குகள் குடிநீர் குழாய்கள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்படும் மேலும் நிலங்களும் ஒப்படைக்கப்படும் அதே நேரத்தில் இந்தப் பகுதிகளில் இருக்கும் ராணுவ பகுதிகள் ராணுவ முகாம்கள் அல்லது தளங்களாக மாற்றப்படும் அந்தப் பகுதிகளின் கட்டுப்பாடு தொடர்ந்து ராணுவத்தின் வசம் இருக்கும்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 62 கண்டோன்மென்ட் பகுதிகள் உள்ளன. இவற்றில் 56 கண்டோன்மென்ட் பகுதிகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும் மீதமுள்ள ஆறு கண்டோன்மென்ட் பகுதிகளும் சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்டவை ஆகும் கடைசியாக அஜ்மீர் கண்டோன்மென்ட் 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த 62 கண்டோன்மென்ட் பகுதிகளும் சுமார் 1.61 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

ஆக்ரா,அல்மோரா,அயோத்தி, பரேலி, சக்ரதா, கிளமன்ட் டவுன், தனாபூர், டேராடூன், ஃபதேகர், கோபால்பூர், ஜபல்பூர், கான்பூர், லான்டூர், லேன்ட்ஸ்டவுன், லக்னோ, மதுரா, மீரட், மோவ், நைனிடால், பஞ்ச்மார்ஹி, பிரயக்ராஜ், ராம்கர், ராணிகேட், ரூர்கி, ஷாஜஹான்பூர், வாரணாசி ஆகிய 25 கண்டோன்மென்ட் பகுதிகள் மத்திய கட்டளையகத்தில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் பரவலாக அமைந்துள்ளன.

அஹமதாபாத், அஜ்மீர், அஹமதுநகர், அவுரங்காபாத், பபினா, பெல்காம், பெல்லாரி, தேஹூ ரோடு, தியோலாலி, ஜான்சி, காம்ப்டி, கன்னூர், கிர்கி, மோரார், நசீராபாத், பூனே, சாகர், செகந்திராபாத், வெல்லிங்டன், பல்லாவரம் ஆகிய 19 கண்டோன்மென்ட் பகுதிகள் தெற்கு கட்டளையகத்தில் குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களில் பரவலாக அமைந்துள்ளன.

அம்பாலா, அமிர்தசரஸ், பாக்லோ, தாக்ஷாய், டல்ஹவுசி, தில்லி, ஃபெரோஸ்பூர், ஜலந்தர், ஜம்மு, ஜூதோக், கசோலி மற்றும் சுபாத்து ஆகிய 13 கண்டோன்மென்ட் பகுதிகள் மேற்கு கட்டளையகத்தில் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் தில்லி ஆகிய ஐந்து மாநிலங்களில் பரவலாக அமைந்துள்ளன.

பேரக்பூர், டூம் டூம், ஜலபஹார், லெபாங், ஷில்லாங் ஆகிய 4 கண்டோன்மென்ட் பகுதிகள் கிழக்கு கட்டளையகத்தில் மேற்கு வங்கம் மற்றும் மேகாலயா ஆகிய இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளன, பதாமிபாக் என்ற 1 கண்டோன்மென்ட் பகுதி வடக்கு கட்டளையகத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.