சீனாவுக்கு சவால் அளிக்கும் 1.2லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மெகா கொள்முதல் திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் !!
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை பலப்படுத்தும் பொருட்டும் வளர்ந்து வரும் சீனாவின் அட்டூழியங்களுக்கு சவால் உடுக்கும் வகையிலும் இந்திய கடற்படை மற்றும் இந்திய தரைப்படை ஆகியவற்றுக்கான சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC – Defence acquisition Council எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மிக விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் படி இந்திய கடற்படைக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் P17B Project 17 Bravo திட்டம் 17 பிராவோ இன் கீழ் தலா 8000 டன்கள் எடை கொண்ட 7 முதல் 8 அடுத்த தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஃப்ரிகெட் ரக கப்பல்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் இந்த கூட்டத்தில் பிரதான இடத்தை பிடிக்கிறது இந்த கப்பல்கள் தற்போது கட்டப்பட்டு வரும் நீலகிரி ரக ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக கப்பல்களின் அடுத்த தலைமுறையாகும்.
இதற்கான ஒப்பந்தத்தை பிடிப்பதற்கு மும்பையில் அமைந்துள்ள MDL – Mazagon Docks Limited மசகான் கப்பல் கட்டுமான தளம், கொல்கத்தாவில் அமைந்துள்ள GRSE – Garden Reach Shipbuilders & Engineers கார்டன் ரீச் பொறியாளர் மட்டும் கப்பல் கட்டுமான தளம் மற்றும் சென்னை காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L & T Larsen & Toubro லார்சன் மற்றும் டூப்ரோ கப்பல் கட்டுமான தளம் ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதில் மும்பை மசக்கான் கப்பல் கட்டுமான தளம் ஏற்கனவே நீலகிரி ரக ஸ்டெல்த் வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஃப்ரிகேட் ரக கப்பல்களில் நான்கு கப்பல்களையும், கொல்கத்தாவின் கார்டன் ரீச் பொறியியல் மற்றும் கப்பல் கட்டுமான தள நிறுவனம் மூன்று நீலகிரி ரக கப்பல்களையும் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது ஆகவே பாதுகாப்பு அமைச்சகம் இந்த ஒப்பந்தத்தை இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுக்குமா என்பது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.
அதேபோல இந்திய தரைப்படையை பொறுத்தவரையில் ரஷ்ய தயாரிப்பு அரத பழைய சோவியத் ஒன்றிய காலகட்ட T – 72 டாங்கிகளை மாற்றிவிட்டு அவற்றுக்கு பதிலாக சுமார் 1700 FRCV – Future Ready Combat Vehicles எதிர்கால சண்டை வாகனம் அல்லது MBT – Main Battle Tank பிரதான போர் டாங்கிகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் இந்திய தரைப்படையின் டாங்கி ரெஜிமென்ட்டுகளை மிகப்பெரிய அளவில் நவீன மயமாக்கும் என கூறப்படுகிறது.
இவை தவிர இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கக்கூடிய பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனம் தயாரிக்கும் Rafale M கடல்சார் ரஃபேல் விமானங்களில் 26 விமானங்களை வாங்குவது பற்றியும், முப்படைகளுக்கும் சேர்த்து அமெரிக்காவின் General Atomics நிறுவனம் தயாரிக்கும் MQ-9B Predator ட்ரோன்களில் 31ஐ வாங்குவது குறித்தும் இந்த சந்திப்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்ததற்கு பிறகு பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இறுதி ஒப்புதல் அளிக்க முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும். அங்கும் இறுதி ஒப்புதல் கிடைத்து விட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையிலான மிகப்பெரிய மாற்றங்களை இந்தியாவின் முப்படைகளும் சந்திக்கும் என்றால் மிகை ஆகாது.