இந்திய எதிர்ப்பு பதிவிற்கு லவ் ரியாக்ட் செய்த வங்கதேச மாணவி தாய் நாட்டிற்கு அனுப்பி வைப்பு !!

அசாம் மாநிலத்தின் சில்சார் மாவட்டத்தில் அமைந்துள்ள NIT – National Institute of Technology தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று வந்த வங்கதேச மாணவி மைஷா மஹாஜபின் முகநூலில் ஒரு இந்திய எதிர்ப்பு பதிவிற்கு லவ் ரியாக்ட் செய்ததையடுத்து ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மைஷா மஹாஜபின் சில்சார் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ECE Electronics & Communications Engineering மின்னனு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் பயின்று வந்துள்ளார், இவர் இதே கல்லூரியில் படிப்படை முடித்துவிட்டு வங்கதேசம் சென்ற சஹாதத் ஹூசைன் ஆல்ஃபி என்பவர் முகநூலில் பதிவிட்டிருந்த இந்திய எதிர்ப்பு பதிவிற்கு லவ் ரியாக்ட் செய்திருக்கிறார்.

பலர் இந்த பதிவால் கோபமடைந்த நிலையில், இந்து ராக்கி தளம் என்ற கட்சியின் செய்தி தொடர்பாளர் சுவாஷிஷ் சவுதிரி இந்த பதிவை நாங்கள் பார்த்துவிட்டு உடனடியாக காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், இந்த பதிவு வங்கதேசத்தின் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் இருந்து பதிவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சில்சார் அமைந்துள்ள கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா பேசும்போது அந்த மாணவியை நாடு கடத்தவில்லை மாறாக அவரே நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்ததையடுத்து சுதார்கண்டி எல்லை காவல் சாவடி வழியாக வங்கதேச அதிகாரிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும்

மேலும் அவர் தனது படிப்பை முடிக்கவில்லை எனவும், அவர் மீண்டும் வந்து தனது படிப்பை தொடர்வாரா என்பது பற்றி தற்போது எதுவும் கூற இயலாது எனவும், சில்சார் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் தற்போது 70 வங்கதேச மாணவ மாணவிகள் உள்ளதாகவும் அதில் 40 பேர் இந்துக்கள் எனவும், அனைவரையும் தான் நேரடியாக சந்தித்து எந்தவித இந்திய எதிர்ப்பு செயல்களிலும் பங்கெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.