34 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் மிகவும் துக்ககரமான நாளாக அமைந்தது. இன்று வரை இந்திய கடற்படை வரலாற்றில் அது நீங்காத வடுவாக இருந்து வருகிறது. INS ANDAMAN (P74) ஐ என் எஸ் அந்தமான் என்கிற ரோந்து கப்பல் விபத்தை சந்தித்து கடலில் மூழ்கியது, இதில் 15 கடற்படையினர் மரணமடைந்தனர்.
அதாவது வங்கக்கடலில் இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய கட்டளையகத்தின் கீழ் சேவையாற்றி வந்த ஐ என் எஸ் அந்தமான் ரோந்து மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை கப்பல் அந்தமான் தீவுகளில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தை நோக்கி வரும் வழியில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் முறை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கப்பலின் பின்புறம் ஏற்பட்ட கசிவு காரணமாக கப்பலுக்குள் நீர் புகுந்து எஞ்சின் செயலிழந்து நடுக்கடலில் பாசமான கால சூழல் காரணமாக ஏற்பட்டிருந்த கொந்தளிப்பில் சிக்கி கடலில் மூழ்கியது.
இந்த கோர விபத்தில் கப்பலில் பணியாற்றி வந்த 15 கடற்படையினர் உயிர் இழந்தனர். இவர்களில் மூன்று அதிகாரிகள், நான்கு இடைநிலை அதிகாரிகள் மற்றும் எட்டு வீரர்கள் அடங்குவர் அவர்களின் விவரங்கள்,
அதிகாரிகள்:
1) லெஃப்டினன்ட் கமாண்டர். என் எம் பாட்டி
2) லெஃப்டினன்ட் கமாண்டர். சுஜல் புர்கார்
3) லெஃப்டினன்ட் கமாண்டர். எம் சக்ரபோர்த்தி
இடைநிலை அதிகாரிகள்:
1) CPO. ஜி லாரன்ஸ்
2) CPO. சி கே பான்சோட்
3) CPO. பி என் மிஷ்ரா
4) POME. ஐ லால் சிங்
வீரர்கள்:
1) ஹெச். யாதவ் ERA 4
2) பி. துஹான் ERA 4
3) எம் ஜே ஷங்கர் LME
4) வி சிங் EMP 2
5) எஸ் ஆர் சிங் RO 2
6) எஸ் சி ஜோஜூமோன் EMP 2
7) எஸ் குமார் EMP 2
8) ஆர் கே சிங் MER 2
இந்த 15 பேரும் ஒரு கப்பலில் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்களின் மரணம் கடற்படையில் ஆழ்கடலில் மிகவும் கடினமான சூழல்களுக்கு இடையே பணிபுரிவோரின் கஷ்டத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது. இந்த சம்பவத்தின் 34-வது நினைவு தினத்தின் போது மேல் குறிப்பிட்ட 15 கடற்படையினரின் அர்ப்பணிப்பும் சேவையும் தியாகமும் ஒரு நாளும் மறக்கப்படாது என்பதை தெரிவித்து வீரவணக்கத்தை பதிவு செய்வோம்.
தேசப் பணியின் போது உயிரிழந்த இவர்கள் என்றும் இந்திய தேசத்திற்கு ஹீரோக்கள் தான் மேலும் அவர்களின் நினைவு இன்றும் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பல லட்சம் வீரர்களின் தைரியத்தையும் தன்னலமற்ற சேவையும் நினைவு கூற வைக்கிறது என்றால் மிகை அல்ல.
மேல் குறிப்பிட்ட அந்தமான் ரோந்து மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் முறை கப்பல் அர்னாலா வகையை சேர்ந்த ஒரு கார்வெட் ரக கப்பல் ஆகும். இதன் முழு எடை 1150 டன்கள் ஆகும். இதனால் மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். மேலும் மணிக்கு 19 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் அதே போல வேகமான மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் 830 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக் கூடியதாகும்.
இந்தக் கப்பலில் 90 வீரர்கள் வரை இருப்பர், இந்த போர்க்கப்பலில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் என்னவெனில் நான்கு 76 மில்லி மீட்டர் துப்பாக்கிகள், நான்கு RBU 6000 நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள், மூன்று 533 மில்லி மீட்டர் நீரடிகளை அமைப்புகள், கடல் கண்ணிவெடிகள் மற்றும் மூழ்கி வெடிக்கும் குண்டுகள் ஆகும்.
சோவியத் தோன்றிய ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல்கள் அந்நாட்டில் பெட்யா-3 என அறியப்பட்டன மேலும் அங்கு இவை ஃப்ரிகேட் ரக கப்பல்களாக வகைப்படுத்தப்பட்டன ஆனால் இந்திய கடற்படை இவற்றை கார்வெட் ரக கப்பலாக வகைப்படுத்தியது, ரஷ்ய கப்பல்களில் ஐந்து 406 மில்லிமீட்டர் நீரடிகணை ஏவுகுழாய்கள் இருக்கும் ஆனால் ஏற்றுமதி வடிவங்களில் இவற்றை விட பெரிய நீரடிகணை ஏவு குழாய்கள் பொருத்தப்பட்டு இருந்தன இவற்றின் எண்ணிக்கையும் குறைவாகும்.
இந்திய கடற்படையில் இத்தகைய 11 கப்பல்கள் சேவையில் இருந்தன.
1) INS ARNALA அர்னாலா (P68)
2) INS ANDROTH அந்த்ரோத் (P69)
3) INS ANJADIP அஞ்சதீப் (P73)
4) INS ANDAMAN அந்தமான் (P74)
5) INS AMINI அமினி (P75)
6) INS KAMORTA கமோர்தா (P77)
7) INS KADMATT கட்மாத் (P78)
8) INS KILTAN கில்டான் (P79)
9) INS KAVARATTI கவராத்தி (P80)
10) INS KATCHALL கத்சால் (P81)
11) INS AMINDIVI அமிந்திவி (P83)
இந்த கப்பல்களின் பெயர்கள் எல்லாம் அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு ஆகிய பெருந்தீவு கூட்டங்களை சேர்ந்த ஒவ்வொரு தீவுகளின் பெயர்களாகும். இந்த 11 போர்க்கப்பல்களும் இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியத்தின் 31 வது ரோந்து கலன் படையணியிலும் மேற்கு பிராந்தியத்தின் 32 வது ரோந்து கலன் படையணியிலும் சேவையாற்றி வந்தன.
இந்த கப்பல்களைப் பற்றிய சிறப்புமிக்க குறிப்பிடத்தக்க மேலும் சில தகவல்கள் என்னவெனில் மேலே குறிப்பிட்ட கப்பல்களில் ஐ என் எஸ் கில்தான் மற்றும் ஐ என் எஸ். கத்சால் ஆகவே கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போரின் போது பாகிஸ்தான் நாட்டின் கராச்சி துறைமுகத்தை துவம்சம் செய்த Operation Trident ஆபரேஷன் ட்ரைடன்ட் நடவடிக்கையில் பங்கு பெற்றவை ஆகும் மேலும் ஐ என் எஸ் அந்தமான் போர்க்கப்பலின் விபத்து அந்த கால மதிப்பில் இந்திய கடற்படைக்கு எட்டு கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்போது இந்திய கடற்படையில் கவராட்டி கமோர்தா கில்தான் மற்றும் கட்மாத் என்ற பெயரில் கமோர்தா ரகத்தை சேர்ந்த நீர் மூழ்கி எதிர்ப்பு போர் முறை ஃப்ரிகேட் ரக கப்பல்கள் சேவையாற்றி வருகின்றன.