200க்கும் மேற்பட்ட சுகோய் போர் விமான இன்ஜின்கள் வாங்குவதற்கு 21,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் !!

இந்திய விமானப்படையில் உள்ள 200க்கும் மேற்பட்ட சுகோய் 30 Sukhoi Su-30 MKI போர் விமானங்களின் தரத்தையும் திறனையும் அதிகரிக்கும் விதமாக 230 ஜெட் என்ஜின்களை வாங்குவதற்கான சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து இன்ஜின்களும் அதன் அடிப்படை நிலையில் இருந்து முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பதாகும். இந்தப் பணியை நாட்டின் முன்னணி மற்றும் பிரதான வானூர்தி மற்றும் வானூர்தி அமைப்புகள் வடிவமைப்பு தயாரிப்பு நிறுவனமான HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. அந்த வகையில் AL-31 FP ரக இன்ஜின்கள் தான் சுகவை போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய விமான படையை பொருத்தவரையில் அதன் சுகோய் போர் விமானங்களை எப்பொழுது தயார் நிலையில் வைத்திருப்பதற்கு மேல் குறிப்பிட்ட என்ஜின்களில் ஏறத்தாழ 950 தேவைப்படுகிறது.

இந்த இன்ஜின்களின் தயாரிப்பு பணி இந்தியாவிலேயே முழுக்க முழுக்க நடைபெறுவதால் இந்தியாவின் பாதுகாப்பு தொழில் துறைக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமும் அனுபவமும் கிடைக்கும் மேலும் இது உள்ளூர் பொருளாதாரம் மற்றும் மாநில பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றிற்கும் வலு சேர்க்கும். பல்வேறு நடுத்தர சிறு குறு பாதுகாப்பு தொழில் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்குவதற்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அழைப்பு விடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க சில மாதங்களுக்கு முன்பு தான் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படையின் சண்டை திறனின் முதுகெலும்பாக விளங்கும் சுகோய் 30 போர் விமானங்களை தரம் உயர்த்தும் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சூப்பர் சுகோய் என்ற இத்திட்டத்தின் கீழ் 100 Su-30 MKI போர் விமானங்கள் புதிய ஏவியானிக்ஸ், ரேடார், மின்னணு போர் அமைப்பு மற்றும் கணினி அமைப்பு ஆகியவற்றை கொண்டு நவீனப்படுத்தப்பட உள்ளது கூடுதல் தகவலாகும்.

மேலே குறிப்பிட்ட AL -31 FP ரக இன்ஜின்களை சோவியத் யூனியன் காலகட்டத்தில் Lyulka என்ற நிறுவனமும் தற்போதைய ரஷ்யாவில் NPO Saturn என்கிற நிறுவனமும் வடிவமைத்து தயாரித்து வருகின்றன. இந்த எஞ்சின் Su-27, Su – 30, Su – 33, Su-34,Su -35, Su – 37, Su – 57, Su -70 டிரோன், சீனாவின் செங்டூ Chengdu J-10, J – 20 மற்றும் ஷென்யாங் Shenyang J – 11 ஆகிய போர் விமானங்களில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.