இந்தியா மற்றும் வியட்நாம் நீர்மூழ்கி தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இணைந்து செயலாற்ற திட்டம் !!
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய தலைநகர் புது தில்லியில் 14ஆவது இந்தியா வியட்நாம் இடையேயான பாதுகாப்பு கொள்கை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் அர்மானே மற்றும் வியட்நாம் சார்பில் தேசிய பாதுகாப்பு இணை அமைச்சர் சீனியர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹோவாங் ஷுவான் சியென் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு அதிகாரிகளும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு சார்ந்த விவகாரங்களின் ஆழத்தை சீராய்வு செய்தனர். மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் சென்ற போது இருதரப்புக்கு இடையே கையெழுத்தான ” 2030ஆம் ஆண்டை நோக்கிய இந்தியா வியட்நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டு தொலைநோக்கு பார்வை திட்டம்” அமலுக்கு வந்த பிறகு இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் என்ன என்பது ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது வியட்நாம் தரப்பு இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் விதமாக ஐந்து முக்கிய இடங்களில் கவனம் செலுத்த கேட்டு கொண்டது. அவையாவன இருதரப்பு குழுக்களின் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தை, மூத்த அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, படைகள் இடையேயான நேரடி ஒத்துழைப்பு, கல்வி மற்றும் பயிற்சி மற்றும் இருநாட்டு பாதுகாப்பு தொழில்துறை இடையேயான ஒத்துழைப்பு ஆகும். இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் இதனை வரவேற்றது மட்டுமின்றி சைபர் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம், நீர்மூழ்கி தேடல் மற்றும் மீட்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என முன்மொழிந்தார்.
மேலும் அவர் இந்திய பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களின் திறன்களை சுட்டிக்காட்டி வெளிநாடுகளின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்து எப்படி அவர்களின் ராணுவ திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன என்பதை எடுத்துரைத்து வியட்நாம் மக்கள் ராணுவப்படைகள் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள் உடனான ஒத்துழைப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய பாதுகாப்பு துறை செயலாளரும் வியட்நாம் தேசிய பாதுகாப்பு இணை அமைச்சரும் இரு நாட்டு ராணுவங்கள் இடையேயான பயிற்சி மற்றும் பயிற்றுநர்கள் நிபுணர்கள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கான புரிந்துணர்வு கடிதத்தில் கையெழுத்திட்டனர், இந்தியா வியட்நாம் இடையேயான உறவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மிக முக்கியமான பங்காற்றுகிறது மேலும் இந்தியாவின் இந்தோ பசிஃபிக் பிராந்தியம் மற்றும் கிழக்காசியா நோக்கிய கொள்கையில் வியட்நாம் முக்கிய கூட்டாளி என்பது கூடுதல் சிறப்பாகும்.