கிரீஸ் நாட்டை சேர்ந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்கள் அளவிலான கச்சா எண்ணெயுடன் செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹூத்தி இஸ்லாமிய பயங்கரவாதிகள் அதைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்துள்ளனர்.
இது பற்றி ஐரோப்பிய ஒன்றிய கூட்டு கடல் சார் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தியில் கப்பல் தாக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மீன்பிடி தொழிலுக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் மேலும் கப்பலின் கேப்டன் விடுத்த அவசர உதவி கோரிக்கையை அடுத்த ஒரு போர் கப்பலை குழுவினரை மீட்க அனுப்பியதாகவும் கப்பல் சம்பவ இடத்தை நெருங்கிய போது மீண்டும் மீண்டும் சோயூனியன் கப்பலை தாக்க ஏவப்பட்ட ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதென்ஸ் நகரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் Delta Tankers டெல்டா டேங்கர்ஸ் என்ற கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானது தான் தற்போது தாக்குதலுக்கு உள்ளான டேங்கர் கப்பல் இதன் பெயர் Sounion சோயூனியன் ஆகும். மேல் குறிப்பிட்ட டெல்டா டேங்கர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று கப்பல்கள் இதுவரை செங்கடலில் தாக்கப்பட்டுள்ளன. இதில் தற்போதைய தாக்குதல் தான் மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது. இது குறித்து டெல்டா டேங்கர்ஸ் கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தாக்குதலில் மிகப்பெரிய அளவுக்கு கப்பலில் தீ பற்றி எரிந்ததாகவும் அதனை கப்பல் குழுவினர் அணைத்தாகவும் மேலும் கப்பலை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்ற ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கப்பலின் தற்போதைய நிலை பற்றி இங்கிலாந்து கடற்படையின் UKMTO United Kingdom Maritime Trade Operations ஐக்கிய ராஜ்ய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் பிரிவு கப்பல் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்த குழுவினர் அனைவரையும் காப்பாற்றியுள்ளதாகவும் தற்போது எரித்திரியா மற்றும் ஏமனுக்கு இடைப்பட்ட செங்கடல் பகுதியில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் கப்பலின் எஞ்சின் முழுமையாக செயலிழந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டுக்கான இங்கிலாந்து தூதர் சட்டவிரோதமான பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல் நடத்தப்பட்ட தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளார். கிரீஸ் நாட்டு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் கிறிஸ்தோஸ் ஸ்டைலிநிடியாஸ் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் கிரீஸ் நாட்டு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஈராக்கில் இருந்து கிரீஸ் நாட்டின் அகியோய் தியோட்றோய் துறைமுகம் நோக்கி இரண்டு ரஷ்யர்கள் மற்றும் 23 பிலிப்பைன் நாட்டு மாலுமிகளுடன் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் பற்றி ஏமன் நாட்டின் ஹூத்தி பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் சோ யூனியன் கப்பலை இயக்கும் நிறுவனம் இஸ்ரேலுடன் தொடர்புடையதாகும் எனவும் மேலும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு தங்களது எச்சரிக்கையை மீறி பயணித்ததாகவும் ஆகவே தான் அதை தாக்கியதாகவும் தொலைக்காட்சியில் நேரடியாக பேசி அந்த அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் ஹூத்தி பயங்கரவாதிகள் செங்கடல் பகுதியிலும் ஏடன் வளைகுடா பகுதியிலும் நடத்தி வரும் தாக்குதல்களில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன மேலும் மூன்று அப்பாவி மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர் இது தவிர பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக பிரசித்தி பெற்ற சூயஸ் கால்வாய் வழியை கப்பல் நிறுவனங்கள் பயன்படுத்துவதை குறைத்துள்ளன இதன் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி இந்திய பெருங்கடல் பகுதிக்கு கப்பல்கள் பயணிக்க துவங்கியுள்ளன இதன் விளைவாக சரக்கு போக்குவரத்துக்கான நாள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மேலும் செலவும் அதிகரித்துள்ளது இது பல நாடுகளில் உள்ள நுகர்வோரையும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு உள்ளான சோ யூனியன் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஏமன் நாட்டின் ஹோதைதா துறைமுகத்திலிருந்து மேற்கே 143 கிலோ மீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதற்கு அருகே வந்த இரண்டு சிறிய படகுகளில் இருந்து முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பிறகு மூன்று ஏவுகணைகள் அல்லது ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்கள் கப்பலின் மீது மோதி வெடித்துதாகவும் சொல்லப்படுவது கூடுதல் தகவலாகும்.