முன்னாள் இந்திய தரைப்படை தலைமை தளபதியான ஜெனரல். சுந்தர்ராஜன் பத்மநாபன் இன்று காலை தமிழ்நாடு தலைநகர் சென்னை நகரத்தில் அவரது இல்லத்தில் வைத்து மரணம் அடைந்ததாக இந்திய தரைப்படை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவருடைய வயது 83 ஆகும் மேலும் இவர் இந்திய தரைப்படையின் இருபதாவது தலைமை தளபதியாக பதவி வகித்தவர் என்பதும் சுதந்திர இந்தியாவின் சிறந்த தரைப்படை தளபதிகளில் ஒருவர் என அறியப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த சுந்தர்ராஜன் பத்மநாபன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள RIMC – Rashtriya Indian Military College எனப்படும் இந்தியாவின் சிறந்த ராணுவ பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு 1956 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பூனை நகரில் அமைந்துள்ள NDA – National Defence Academy தேசிய பாதுகாப்பு அகாடமியில் உயர்கல்வி பாய்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி பெற்று மேல் ராணுவ பயிற்சிக்காக மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரில் அமைந்துள்ள IMA – Indian Military Academy இந்திய ராணுவ அகாடமியில் முழு ராணுவ பயிற்சியை முடித்து கடந்த 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி இந்திய தரைப்படையின் Regiment of Artillery பீரங்கி படையில் 2nd Lieutenant அந்தஸ்தில் அதிகாரியாக இணைந்து ராணுவ பணியை துவக்கினார்.
ஜெனரல் சுந்தர்ராஜன் பத்மநாபன் தனது 43 வருட ராணுவ சேவையில் பல்வேறு முக்கிய ராணுவ கல்வி மையங்களில் உயர் படிப்புகளை பயின்றுள்ளார் மேலும் பல முக்கியமான பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி வெலிங்டனில் அமைந்துள்ள DSSC – Defence Services Staff College எனப்படும் பாதுகாப்பு சேவைகள் ஊழியர் கல்லூரியில் முக்கியமான வழிநடத்துதல் மற்றும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த படிப்பை முடித்தார் அதன் பிறகு 1975 முதல் 76 ஆம் ஆண்டு வரை ஒரு சுதந்திர இலகர பீரங்கி படையணியை வழி நடத்தினார் அதன் பிறகு 1977 முதல் 1980 ஆம் ஆண்டு வரை இந்திய தரைப்படையின் மிக மூத்த பீரங்கி படையணிகளில் ஒன்றான Gazala Mountain Regiment கசாலா மலையக பீரங்கி படையணியை வழி நடத்தினார். அதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள தியோலாலியில் அமைந்துள்ள பீரங்கி படையின் பயிற்சி மையத்தில் பீரங்கி சுடுதல் பயிற்றுநர் ஆகவும் அவர் தனது ராணுவ பயிற்சியை பெற்ற இந்திய ராணுவ அகாடமியில் இரண்டு முறை பயிற்றுனர் ஆகவும் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் பிரகேடியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இந்திய தலைநகர் தில்லியில் உள்ள NDC – National Defence College தேசிய பாதுகாப்பு கல்லூரியில் அதி முக்கியமான பாதுகாப்பு துறை சம்பந்தமான படிப்புகளை படித்தார். தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஒரு காலாட்படை பிரிகேட் படையை வழிநடத்தினார் தொடர்ந்து மார்ச் 1991 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 1992 ஆம் ஆண்டு வரை ஆன காலகட்டத்தில் பஞ்சாபில் ஒரு காலாட்படை டிவிஷனை வழிநடத்தினார். பின்னர் 1992 செப்டம்பர் முதல் 1993 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்திய தரைப்படையின் பிரதான தாக்குதல் படைப்பிரிவுகளில் ஒன்றான மூன்றாவது கோர் படை பிரிவின் தலைமை பணியாளர் அதிகாரியாக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற சுந்தர்ராஜன் 1993 ஜூலை முதல் 1995 பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான இந்திய தரைப்படையின் 15ஆவது கோர் (15 Corps aka Chinar Corps) ஜெனரல் அந்தஸ்துக்கான தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலத்தில் இந்திய தரைப்படை கஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் வெற்றிகளை குவித்தது அது எந்த அளவுக்கு போனது என்றால் ஒரு கட்டத்தில் ராணுவம் தனது நடவடிக்கைகளை குறைக்கும் அளவுக்கு பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டது காஷ்மீர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வான ஹஸ்ரத்பால் மசூதி நடவடிக்கையில் அரசு சிவிலியன் அதிகாரிகள் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை அதே போல் பயங்கரவாதிகள் கோலோச்சிய சோபோர் பகுதியில் பயங்கரவாதத்தை துடைத்தெறிந்தார் அவர் மட்டும் அப்போது கஷ்மீரில் இல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு கஷ்மீரும் இந்தியாவும் வேறு மாதிரி இருந்திருக்கும் இந்த சேவைகளுக்காக அவருக்கு இந்திய அரசு AVSM – Ati Vishist Seva Medal அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கி கௌரவித்தது. இதற்குப் பிறகு இந்திய தரைப்படையின் உளவுத்துறையான MI – Military Intelligence ன் இயக்குனர் ஜெனரலாக DG Director General (DGMI – Director General Military Intelligence) பதவி வகித்தார் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு இந்திய தரப்பின் வடக்கு பிராந்திய கட்டளையகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார் அதன் பிறகு இந்திய தரப்பின் தெற்கு பிராந்திய கட்டளையகத்தின் தளபதியாகவும் பணியாற்றினார்.
அதன்பிறகு 2000 ஆவது ஆண்டின் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி இந்திய தரைப்படையின் 19ஆவது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் அப்போது முப்படை தளபதிகள் கமிட்டியின் தலைவராகவும் பதவி வகித்தார். அவரது பதவி காலத்தின் போது தான் 2001 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது அதை தொடர்ந்து ஆப்பரேஷன் பராக்கிரம் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லை அருகே மிகப்பெரிய அளவில் படைகளை குவித்தது. 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி முதல் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி வரையிலான ஏறத்தாழ ஆறு மாத காலகட்டத்தில் இந்தப் படை குவிப்பும் அதைத்தொடர்ந்து எல்லோரும் சிறிய அளவில் தாக்குதல்களும் நடைபெற்றன. இது இந்திய ராணுவம் கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது மேற்கொண்ட படை நகர்வு நடவடிக்கைக்கு பிறகு மிகப்பெரிய படை நகர்வு நடவடிக்கையாக கூறப்படுகிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர் உலக நாடுகள் அணு ஆயுத போர் மூளுமோ என்ற அச்சத்தில் இருந்தன, பாகிஸ்தானும் அணு ஆயுத மிரட்டல் விடுத்தது அப்போது ஜெனரல் சந்தர்ராஜன் இந்திய படைகள் போர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை செய்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்படும் அவர்கள் எஞ்சி இருப்பது சந்தேகம் தான் என அதிரடியாக எச்சரிக்கை விடுத்து பாகிஸ்தானை கதிகலங்க வைத்தார்.
இந்தப் படை நகர்வு நடவடிக்கை முடிவு பெறுவதற்கு முன்னதாக இந்திய தரப்பின் ஜாட் ரெஜிமென்ட் Point 5070 என்கிற பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த மலைச்சிகரத்தை கைப்பற்றி பல்வான் பாயின்ட் என பெயர் சூட்டியது. இதன் காரணமாக திராஸ் பகுதியில் இந்தியா முழுமையான ஆதிக்கத்தை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக செலுத்த இன்றளவும் முடிகிறது. இந்த மகிழ்ச்சிகரத்தை இழந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அந்தப் பகுதிக்கு பொறுப்பான தனது ராணுவ அதிகாரிகளை எல்லாம் மாற்றம் செய்தது அதே நேரத்தில் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு நடத்திய இந்திய தரைப்படையின் லெஃப்ட்னர் ஜெனரல் தீபக் சம்மன்வார் UYSM Udhyam Yudh Seva Medal உத்தம யுத்த சேவை பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஜெனரல. சுந்தர்ராஜன் பத்மநாபன் அவர்களை அவரது சக அதிகாரிகள் மூத்த அதிகாரிகள் மற்றும் அவரது கீழ் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் நெருக்கமான ராணுவ வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அன்புடன் ஆங்கிலத்தில் பத்மநாபன் Padmanaban என்கிற அவரது பெயரை சுருக்கி Paddy என அழைத்தனர். ஜெனரல் சுந்தர்ராஜன் ஓய்வு பெற்ற பிறகு பொது வெளிச்சத்தில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தார் குறிப்பாக 2003ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில ஆளநர் பதவி தேடி வந்த போது கைப்பாவையாக இருக்க விரும்பாத காரணத்தால் அதை நிராகரித்தார் என்பது கூடுதல் தகவலாகும். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் சேகர் பாபு மற்றும் இந்திய தரைப்படை தலைமை தளபதி மற்றும் தரைப்படை சமுக வலைதளத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.