ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் தான் சமாதானத்திற்கு வழிவகுக்கும் அதுவும் உறுதி பாடற்ற ஒரு சமாதானத்தை தான் தரும் எனக் கூறியுள்ளார். அதாவது தற்போது மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்கள் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தனது கருத்தை தனது telegram கணக்கில் பதிவு செய்யும்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெக்ரானில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானிய லெபனான் தலைநகர் பைரூட் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் மூத்த ராணுவ பிரிவு தலைவன் ஃபுவாத் ஷூக்கர் ஆகியோர் இஸ்ரேல் நடத்திய அதிரடி துல்லிய குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரானும் ஹமாசும் ஹிஸ்புல்லாவும் அறிவிக்கை விடுத்துள்ளனர் இந்த நிலையில் அமெரிக்க ராணுவம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இது பற்றி பேசிய ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முடிச்சு இறுகி வருவதாகவும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைவரும் அந்தப் பிராந்தியத்தில் ஒரு அமைதியான சூழல் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு உறுதியற்ற நீண்ட நாள் நிலைக்காக சமாதானம் ஏற்படுவதற்கு முழு அளவிலான போர் தான் வழிவகுக்கும் என்பதை உணர்ந்துள்ளதாகவும் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள அந்நாட்டின் தலைமை பள்ளிவாசலில் ஏற்றப்பட்டுள்ள பழி வாங்குதலை குறிக்கும் சிகப்பு கொடி ஈரான் அரசுடைய அதிகாரபூர்வ எச்சரிக்கைகள் மற்றும் ஹமாஸ் ஹிஸ்புல்லா ஏமன் நாட்டை சேர்ந்த ஹூத்திக்கள் விடுத்துள்ள எச்சரிக்கைகள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய போர் அதுவும் மிகப்பெரிய அளவிலான ஒன்று விரைவில் வெடிக்கும் என்பதை உணர்த்துவதாகவும்.
எது எப்படியானாலும் கடந்த சில மாதங்கள் முன்பு இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி ஏவுகணைகள் மூலம் தாக்கிக் கொண்டது ஏதோ ஒரு வகையில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மேற்கொண்ட நடவடிக்கை போன்றது தான் எனவும் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மிகவும் வெறுத்துக் கொண்டு மாறி மாறி நிழல் யுத்தம் மற்றும் அவ்வப்போது நேரடி தாக்குதல்கள் நடத்திக் கொண்டு வந்தாலும் ஒரு மிகப்பெரிய அளவிலான நேரடி போர் இரு நாடுகளையும் அந்த பிராந்தியத்தில் கடுமையாக பாதித்து பின் தள்ளிவிடும் என்பதை உணர்ந்தே இருக்கின்றன என பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.