சீன போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் நடமாடுவதற்கான காரணம் என்ன ??

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்கரை நடமாட்டம் ஒன்றும் புதிதல்ல அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும். சீனாவை பொருத்தமட்டில் இவை அனைத்தும் ஆராய்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் எனக் கூறப்பட்டாலும் இது சீனாவின் விரிவடையும் கடல்சார் நடவடிக்கைகள் என்பதுதான் அடிப்படை உண்மையாகும் இது சீனாவின் புவிசார் அரசியல் லட்சியங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒன்றிணைக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ஷியாங் வாங்-3, ஸாங் ஷான் டாங் ஷியு மற்றும் யாங் வாங்-7 ஆகிய முன்று கப்பல்கள் இந்தியாவின் வான் போக்குவரத்து துறையால் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே இயங்குவது செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்தது, அதாவது இந்திய கடற்படை நடத்தும் பயிற்சி நடைபெறும் பகுதிக்கு மிகவும் அருகே ஷியாங் யாங் ஹாங்-3 கப்பல் இயங்கி வந்தது இப்படி பயிற்சிகளின் போது இந்திய கடற்படை பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் இதர வேண்டும் விவரங்களை சேகரிப்பது தான் அடிப்படை நோக்கம் என கருதப்படுகிறது. ஆகஸ்ட் 22-23 மற்றும் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 1 வரை பல்வேறு ஏவுகணைகள், நீரடிகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயிற்சிகள் நடைபெற உள்ளன.

சீன ஆய்வு கப்பல்கள் இப்படி இந்திய பெருங்கடல் பகுதிகளில் இயங்குவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன அவற்றைப் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

1) இரட்டை ஆராய்ச்சி:
அதாவது சீன ஆய்வுக் கப்பல்கள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்த ஆராய்ச்சி என்ற பெயரில் ராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த தகவல்களை சேகரித்து அந்நாட்டு ராணுவத்திற்கு வழங்கும் ஆபத்துகள் உள்ளனகுறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் படுகையை ஆய்வு செய்து கடலுக்கு அடியே உள்ள நீரோட்டம் மலைகள் பள்ளத்தாக்குகள் கடல் படுகை ஆகியவற்றைப் பற்றி தகவல் சேகரிப்பது போர்க்கப்பல்கள் மற்றும் குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்களின் நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியாக அமையும். அதாவது கடலின் தன்மைக்கு ஏற்ப நீர்மூழ்கி கப்பல்கள் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வழி வகுக்கும். இது மட்டும் இன்றி இந்திய பெருங்கடல் பகுதியில் கடலுக்கு அடியில் காணப்படும் நிக்கல், கோபால்ட்டு, மாங்கனீசு மற்றும் செம்பு ஆகிய கனிம வளங்களின் இருப்பு பற்றியும் இவை ஆராய்ச்சி செய்து வருகின்றன எனக் கூறப்படுகிறது.

2) கண்காணிப்பு மற்றும் உளவு தகவல் சேகரிப்பு:

மேல் குறிப்பிட்ட சீன ஆய்வு கப்பல்கள் இந்தியாவின் ராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் பெரும்பாலும் நடைபெறும் வங்கக்கடல் பகுதியையொட்டி இயங்கி அவற்றை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கப்பல்கள் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை பயன்படுத்தி மிகவும் ரகசியமாக தகவல்களை சேகரிப்பதாக சொல்லப்படுகிறது கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தோனேசிய கடற்கரையில் சீனக் கடற்படைக்கு சொந்தமான நீரடி ட்ரோன் ஒன்று கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

3) புதிய மீன்பிடி களங்களை கண்டறிவது:

சீன கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இயங்குவதற்கு மற்றொரு மிக முக்கியமான காரணம் முன் வைக்கப்படுகிறது அதாவது சீனாவின் மீன்பிடித் தொழில்துறை மிகப்பெரியதாகும் அந்நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் இது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஏற்கனவே சீனாவின் மீன்பிடி கப்பல்கள் பிலிப்பைன்ஸ் மலேசியா இந்தோனேசியா வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்பகுதிகளிலும் புகுந்து மிகப் பெரிய அளவில் மீன்களைப் பிடித்து வருகின்றன இது அந்தந்த நாடுகளின் மீனவர்களையும் மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. சீனாவின் இந்த அபரிமிதமான தேவையை சந்திப்பதற்கு புதிய மீன்பிடி களங்கள் தேவைப்படுகின்றன ஆகவே அவற்றை கண்டறிவதற்கு இந்த அது கப்பல்கள் உதவியாக இருக்கும் நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் இவை நடமாடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

4) கடலடி கேபிள் வலையமைப்பு:

மேற்கத்திய தகவலின் படி உலகின் 99 சதவீத தகவல் தொடர்பை பரிமாற உதவும் கடலடி கேபிள் வலையமைப்பு சீனாவின் தகவல் திருட்டு மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு மேல் குறிப்பிட்ட சீனாவின் ஆய்வு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐரோப்பாவின் எஸ்டோனியா நாடு ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுடன் இணைக்கும் தனது இரண்டு கடலடி கேபிள்களை சீன கப்பல்கள் துண்டித்ததாகவும் குற்றச்சாட்டு வைத்தது. இது சீனாவால் உலகளாவிய ரீதியில் தகவல் தொடர்பு துறைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை சுட்டிக்காட்டுகிறது.

5) பிராந்திய மோதல்:

தற்போது இந்தியாவுடன் சீனாவுக்கு இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் சீனாய்வு கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் தங்களது நடமாட்டத்தை அதிகரித்திருப்பதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது இந்த கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் நடமாடுவது மட்டுமின்றி இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ள பாகிஸ்தான் இலங்கை மாலத்தீவுகள் ஜிபூட்டி ஆகிய நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக இந்தியாவுக்கு மறைமுகமான அழுத்தம் கொடுப்பது மற்றும் நெருக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக வைத்து செயல்படுகின்றன.

6) ஏவுகணை சோதனைகள் கண்காணிப்பு:

இந்தியா ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூர் மற்றும் அப்துல் கலாம் தீவுகளில் இருந்து நடத்தும் பல்வேறு ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவும் செயற்கைக்கோள்கள் பற்றிய தகவல்களை சீன ஆய்வு கப்பல்கள் சேகரிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது மேலும் இந்த ஆய்வு கப்பல்கள் தங்களது இருப்பிடத்தை யாரும் அறிய கூடாது என்பதற்காக டிரான்ஸ்பான்டர்களை அணைத்து விட்டு இயங்குவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது கூடுதல் தகவலாகும்.