கடந்த ஜூலை மாதம் முதல் வங்கதேசத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களும் அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் ஸ்திரத்தன்மையின்மை காரணமாக நேற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு தப்பி இந்தியா வந்தடைந்தார். அதாவது கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் பங்கு பெற்ற வங்கதேச வீரர்களின் குடும்பங்களுக்கு குடிமைப் பணிகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை ஒழிக்க வேண்டுமென வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நாளடைவில் வலுவடைந்து மிகப்பெரிய அளவில் அரசியல் ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனுடன் சேர்ந்து வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பேகம் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வங்கதேச பொதுத் தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அவாமி லீக் கட்சி நான்காவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்ற போது தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டும் வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு மேலும் அதிக அளவில் வலு சேர்த்தது. ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தற்போது இந்த பிரச்சினைகளுக்கு பின்னால் அமெரிக்கா இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் சில நாட்களுக்கு முன்னால் ஷேக் ஹசீனா ஒரு நாடு வங்கதேசத்தில் விமானப்படை தளம் அமைக்க கோரிக்கை வைத்ததாகவும் அதனை நிராகரித்த காரணத்தால் இந்த போராட்டங்களை தூண்டி விட்டதாகவும் அந்த நாடு வங்கதேசம் மியான்மர் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை உடைத்து புதிய நாடு ஒன்றை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். இவரின் இந்த குற்றச்சாட்டு அமெரிக்காவை பற்றியது என கூறப்படுகிறது. அதாவது ஷேக் ஹசீனாவை ஒரு வெள்ளையர் மேற்குறிப்பிட்ட விவகாரங்களை நடத்த அணுகியதாக ஷேக் ஹசீனா கூறியிருக்கிறார். மேலும் அமெரிக்கா தொடர்ந்து வங்கதேச தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றது என கூறி வந்ததும் போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக கூறி கண்டனம் தெரிவித்து வந்ததும் மேலும் நேற்று வங்கதேச மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் மற்றும் மாற்றத்தை வரவேற்பதாகவும் கூறியது எல்லாம் குறிப்பிடத்தக்கது ஆகும்.
அதே நேரத்தில் தற்போது வங்கதேசத்தில் மிகப்பெரிய அளவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானுடைய தலையீடு காரணமாக கூறப்படுகிறது. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து வங்கதேசத்தில் வெற்றி அடைந்துள்ளதாகவும் குறிப்பாக பாகிஸ்தான் தான் வங்கதேச எதிர்கட்சியான இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பேகம் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசிய எதிர்கட்சி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி ஆகியவற்றிற்கு ஆதரவும் நிதியும் அளித்தாக கூறப்படுகிறது. குறிப்பாக காஷ்மீரில் கொலைகள் போராட்டங்களை தூண்டி விட்டு அரசியல் ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தி சர்வதேச கவனத்தை ஈர்த்து என்ன செய்ய நினைத்து தோல்வி அடைந்ததோ அதை வங்கதேசத்தில் செய்து வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேற விரும்பாத நிலையில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் நலம் விரும்பிகளும் அவரை வற்புறுத்தி அவரையும் அவரது சகோதிரியையும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வங்கதேச ராணுவமும் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற ஒரு மணி நேரம் கெடு விதித்திருந்தது. அதனை தொடர்ந்து வங்கதேச விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து ஒரு சிறிய ஒடுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வங்கதேச விமானப்படையின் C-130 போக்குவரத்து விமானம் மூலமாக தில்லி அருகேயுள்ள ஹின்டன் விமானப்படை தளத்திற்கு வந்தார்.
இந்திய எல்லைக்குள் வங்கதேச விமானம் வந்ததும் மேற்கு வங்க மாநிலம் ஹசிமாரா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு இந்திய விமானப்படை ரஃபேல் போர் விமானங்கள் தில்லி வரை வான் பாதுகாப்பு அளித்தன. ஹின்டன் விமானப்படை தளத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஷேக் ஹசீனாவை வரவேற்றார். இந்த நடவடிக்கையை இந்திய விமானப்படை தளபதி நேரடியாக விமானப்படை தலைமையகத்தில் இருந்து கண்காணித்தாகவும் இந்திய தரைப்படை தளபதி இந்திய தரைப்படை எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருப்பதை உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஒன்றிரண்டு நாட்களில் ராஜினாமா செய்த முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்படும் நிலையில் இனி அடுத்தடுத்து வங்கதேசத்தில் நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து இந்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் உன்னிப்பாக கவனித்து வருதாகவும் நேற்று பிரதமர் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் உடனடியாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றதும் கூடுதல் தகவல் ஆகும்.மேலும் முதல்கட்ட நடவடிக்கையாக வங்கதேச எல்லையோரம் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு விழிப்புடன் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய ரயில்வே வங்கதேசத்திற்கு இயக்கி வந்த மிதாலி எக்ஸ்பிரஸ் மைத்ரி எக்ஸ்பிரஸ் பந்தன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவையை காலவரையின்றி நிறுத்தி உள்ளது.
இந்தியாவை சுற்றியுள்ள இலங்கை நேபாளம் மியான்மர் வங்கதேசம் மாலத்தீவு ஆகிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல் தற்போது தெற்காசியா முழுவதும் இந்தியாவுக்கு எதிரான சூழலை உருவாக்கி உள்ளது. நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான கேபினட் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா, பிரதமரின் முதன்மை செயலாளர் பி கே மிஷ்ரா, வெளிநாட்டு உளவு அமைப்பான ரா தலைவர் ரவி சின்ஹா மற்றும் உள்நாட்டு உளவு அமைப்பான ஐபி யின் தலைவர் தபன் தேகா ஆகியோர் கலந்து கொண்டு பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.
தற்போது வங்கதேசத்தில் அதிகாரத்தை வங்கதேச ராணுவம் கைப்பற்றி உள்ளது தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஸமான் வங்கதேச ராணுவம் இடைக்கால அரசை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஜனநாயக முறையில் ஒரு அரசை தேர்வு செய்யும் வரை வங்கதேச ராணுவம் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து கொள்ளும் என அறிவித்துள்ளார். ஆனால் மாணவர் அமைப்பு வங்கதேச ராணுவத்தின் அறிவிப்பை ஏற்று கொள்ள மறுத்துள்ளது. அதே நேரத்தில் வங்கதேசம் முழுவதும் இந்து கிறிஸ்தவ மற்றும் புத்த மதத்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று இரவு வங்க தேச தலைநகர் டாக்காவில் ஒரு இந்து கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வங்கதேச ராணுவம் நாடு முழுவதும் ராணுவத்தினரை சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச அவாமி லீக் கட்சியின் சேர்மன் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களை இரண்டாவது வங்கதேச விடுதலை என மாணவர் அமைப்பினர் அழைக்கின்றனர்
வங்கதேச ராணுவம் தற்போது வங்கதேசத்தில் அரசு சொத்துக்களை சூறையாடிவர்களை கண்டறிந்து கைது செய்து வருவதாகவும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் இணைய சேவைகளை முற்றிலுமாக துண்டித்து உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு இது ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னவென்றால் வங்கதேசம் உடனான வர்த்தக பாதிப்பு, இந்தியாவின் எதிரி நாடுகள் வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலை, இந்திய பயங்கரவாத குழுக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் அடைவதை ஷேக் ஹசீனா அனுமதிக்கவில்லை அது இனி மாறும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேச துறைமுகம் வழியாக கடல்சார் வர்த்தக பாதையுடன் இணைக்கும் திட்டத்திற்கான தடை, இனி இந்தியாவின் நலன்கள் பின்தள்ளப்படும் ஷேக் ஹசீனா இருந்தவரை வங்கதேசத்தில் சீனா உடன் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இந்திய நலன்கள் பாதிப்படையாத வகையில் பார்த்து கொண்டார், அதே போல் இந்தியா வங்கதேசம் இடையேயான நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் வருகிற 2026ஆம் ஆண்டு நிறைவடைகிறது அதை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நீருக்காக இந்தியாவை நம்பி இருக்கும் வங்கதேசத்தை பாதிக்கும் இதை இந்தியா பயன்படுத்தி தனக்கு சாதகமாக ஏதேனும் ஒன்றை செய்ய முயற்சிக்கலாம்.
இன்று காலை இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது அதில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி திமுக சார்பில் டி ஆர் பாலு, தேசியாத காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு இந்திய அரசு வங்கதேச சூழலை பொறுத்தவரையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் இந்திய அரசுக்கு ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர் அதே போல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநில மக்களை அமைதி காக்கும்படி கேட்டு கொண்டு இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்க பலமாக தனது கட்சியும் அரசும் இருக்கும் என அறிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு வங்கதேசத்தில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா அப்போதே பிரச்சினைக்கு காரணமான இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தார் ஆனால் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மீண்டும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட்ட நிலையில் அதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஷேக் ஹசீனா அரசு எடுத்தது இதை மாணவர்கள் எதிர்த்து போராட துவங்கினர் அப்போது நீதித்துறை செயல்பாடுகளை மீற முடியாது என அறிவித்தார் தொடர்ந்து போராட்டம் வலுத்த நிலையில் போராட்டக்காரர்களை ஷேக் ஹசீனா வங்க மொழியில் இழிவான வார்த்தையாக கருதப்படும் ரஜாக்கர் என்ற சொல்லை பயன்படுத்தி விமர்சித்தார் மேலும் 1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டோரின் வாரிசுகள் என கூறினார் இது போராட்டக்காரர்களை கோபப்படுத்தி போராட்டங்களை வீரியமடைய செய்தது.
வங்கதேச விடுதலைக்கு பாடுப்பட்டவரும் அதற்கு முதன்மை காரணமானவரும் வங்கதேச நாட்டின் தந்தை என அழைக்கப்படுபவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையும் நேற்று தூக்கில் இடப்பட்டு சிதைக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டது அவரது மகளான ஷேக் ஹசீனாவும் நாட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார் பல இடங்களில் வங்கதேச ராணுவத்தினர் மாணவர்கள் போராட்டத்திற்கு துணையாக நின்றது கூடுதல் தகவல் ஆகும்.