வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியா தான் காரணம் என வங்கதேசம் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது அதாவது இந்தியாவின் திரிபுரா மாநிலம் வழியாக வங்கதேசத்திற்குள் பாயும் கும்தி நதியில் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள தும்புர் அணைக்கட்டை இந்தியா திறந்துவிட்டது தான் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது என குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வங்கதேசம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது மட்டுமின்றி இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வங்கதேசத்தின் இடைக்கால அரசு ஆதரிக்கக் கூடாது எனவும் அப்படி ஆதரித்தால் அது இருதரப்பு விரைவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேச இடைக்கால அரசில் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறையை கவனிக்கும் மாணவர் போராட்டங்களை முன்னெடுத்த மாணவர் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முகமது நஹித் இஸ்லாம் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முனைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்தியா விரைவாக இத்தகைய வங்கதேச எதிர்ப்பு கொள்கைகளில் இருந்து வெளிவரும் என நம்புவதாக கூறியிருந்தார்.
அவர் பேசியதாவது இந்தியா தங்களது நாட்டிற்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் அளிக்காமல் தயாராகுவதற்கு சமயம் தராமல் தும்புர் அணைக்கட்டை திறந்து விட்டதாகவும் இந்தியாவின் இந்த ஒத்துழையாமை தான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் இதன் மூலம் இந்தியா வங்கதேசத்துடன் ஒத்துழைக்காத என்பதை வெளிப்படுத்தியதாகவும் மனிதநேயமற்ற செயலை செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இப்படி இருத்தரப்பிற்கிடையே பிரச்சனை நிலவும் நேரத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மாவை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முனைவர் முகமது யூனுஸ் மேல் குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக அழைப்பானை வெளியிட்டு அழைப்பித்து கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின ஆனால் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை மறுத்துள்ளது மேலும் இந்திய தூதர் பிரணய் வர்மாவை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முனைவர் முகமது யூனுஸ் வழக்கமான முறையில் அழைப்பானை வெளியிடாமலேயே சந்தித்ததாகவும் இந்த சந்திப்பு இந்த வெள்ளப்பெருக்கிற்கு ஒரு சில நாட்கள் முன்பாகவே நடைபெற்றதாகவும் மற்றபடி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் எனவும், இத்தகைய தவறான தகவல்களை வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக ஆதரித்தால் அது இருதரப்பு உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பாக அழைப்பாணை வெளியிட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது எனவும் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் இந்த விவகாரத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பு தேவை எனவும் வங்கதேசத்துடன் இந்திய அரசு இருதரப்பு உறவுகள் சார்ந்த நெறிமுறைகளின் படி அவ்வப்போது உடனுக்குடன் வெள்ளப்பெருக்கு தொடர்பான தகவல்களை பரிமாறி வருவதாகவும் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இந்தியா அணையை திறந்து விட்டதால் அல்ல மாறாக கும்தி நதி பாயும் இந்திய பகுதிகளிலும் சரி வங்கதேச பகுதிகளிலும் சரி பெய்த கனமழை காரணமாக வங்கதேசத்தில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தான் வெள்ள சேதத்தை ஏற்படுத்தியதாகவும்
தும்புர் அணைக்கட்டு வங்கதேச எல்லையில் இருந்து 120 கிலோமீட்டர் மேலே அமைந்துள்ளதாகவும் இது 30 மீட்டர் உயரமே கொண்ட மிக சிறிய அணைக்கட்டு எனவும் இங்கு மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதிலிருந்து 40 மெகா வாட் மின்சாரம் வங்கதேசத்திற்கு அனுப்பப்படுவதாகவும் அணைக்கட்டிற்குப் பிறகு வங்கதேச பிள்ளை வரையிலான 120 கிலோமீட்டர் பாதையில் அமர்பூர், சோனாமுரா 1 மற்றும் சோனாமுரா 2 ஆகிய மூன்று கண்காணிப்பு மையங்கள் உள்ளதாகவும் அதில் அமர்பூர் கண்காணிப்பு மையம் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் வருவதாகவும் இந்த மையத்திலிருந்து உடனுக்குடன் அவ்வப்போது நதியில் வெள்ளத்தின் அளவு குறித்த தகவல்கள் வங்கதேச அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு வருவதாகவும்
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திரிபுரா மாநிலத்திலும் வங்கதேசத்திலும் மிக கனமழை பெய்து வந்ததாகவும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 3 மணி வரை எவ்வித இடையூறும் இன்றி தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும் அதற்குப் பிறகு கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனினும் வேறு பல முறைகள் மூலமாக வங்கதேச அரசிற்கு மாலை 6:00 மணி முதல் தகவல்களை பரிமாறியதாகவும், கடந்த 1956 ஆம் ஆண்டிற்கு பிறகு திரிபுரா மாநிலத்தில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் மாநில தலைநகர் அகர்தலாவின் 80 சதவீத பகுதிகள் வெள்ளப்பெருக்கு மூழ்கியதாகவும் அகர்தலாவில் சுமார் 233 மில்லி மீட்டர் மழை பெய்ததாகவும் அந்த நகரத்தின் வழியாக பாயும் ஹவோரா நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நகரத்திலிருந்து வெள்ளை நீரை பம்புகள் மூலமாக வெளியேற்ற முடியவில்லை எனவும் இந்திய அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
வங்கதேச பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி கிழக்கு வங்கதேசத்தில் உள்ள சுனம்கன்ஜ், மவுல்விபஸார், ஹபீப்கன்ஜ், ஃபெனி, சட்டோக்ராம், நவகாளி, கொமில்லா மற்றும் கக்ராசாரி ஆகிய எட்டு மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் 18 லட்சம் மக்கள் அதாவது 17 லட்சத்து 96 ஆயிரத்து 248 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது, இந்தியா மற்றும் வங்கதேசம் 54 நதிகளின் நீரை பகிர்ந்து கொள்கின்றன ஆகவே இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவில் நதிநீர் பங்கீடு மற்றும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.