மூன்றாவது இந்திய ஜப்பான் 2+2 பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை !!
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்திய தலைநகர் புது தில்லியில் மூன்றாவது இந்திய ஜப்பான் 2+2 பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடைபெற்றது இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர். காமிக்காவா யோகோ, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கிகாரா மினொரு ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை குறித்து ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள இருதரப்பு கூட்டு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பற்றி கீழே பார்க்கலாம்.
1) இரண்டு ஜனநாயக நாடுகளும் பல்வேறு பொதுவான கொள்கைகளை உடைய நிலையில் இரு நாட்டு அமைச்சர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ள சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களை வலுப்படுத்துவது மற்றும் நிலைநாட்டுவது தொடர்பான செயல்பாடுகளுக்கு தங்களது அர்ப்பணிப்பை உறுதி செய்து கொண்டனர். மேலும் ஒரு நாட்டின் இறையாண்மையை மதித்து செயல்படுவது எல்லை பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சமூகமாக தீர்ப்பது மற்றும் ஒரு தலைப்பட்சமாக எல்லைகளை மாற்ற நினைக்கும் சக்திகளின் முயற்சிகளை முறியடிப்பது போன்றவற்றில் கூட்டாக செயல்பட உறுதி பூண்டனர்.
2) அதேபோல இரு நாட்டு அமைச்சர்களும் சுதந்திரமான பாதுகாப்பான அமைதியான வலுவான வளமான இந்தோ பசிபிக் பிராந்தியம் தொடர்பான பொதுவான வியூக முக்கியத்துவம் வாய்ந்த தொலைநோக்கு பார்வையை முன் வைத்தனர். மேலும் இரு நாடுகளின் அமைச்சர்களும் ASEAN – Association of South East Asian Nations தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானுக்கும் அந்த கூட்டமைப்பின் AOIP – ASEAN Outlookfor Indo Pacific இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கான ஆசியானுடைய பார்வை திட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தனர் இது சுதந்திரம் ஒருங்கிணைப்பு வெளிப்படைத்தன்மை சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
3) அதேபோல இருநாட்டு அமைச்சர்களும் இந்தோ பசிபிக் பிராந்தியம் தொடர்பான மற்றும் உலகளாவிய விவகாரங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இரு நாடுகளும் QUAD க்வாட் கூட்டமைப்பில் தங்களது ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் கடந்த ஜூலை 29ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற QUAD க்வாட் மாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தங்களது அர்ப்பணிப்பை அதிகப்படுத்தவும் முடிவு செய்தனர்.
4) இரு நாட்டு அமைச்சர்களும் இந்தியா ஜப்பான் இடையான இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளை வரவேற்கும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான் இந்தியா இடையேயான இத்தகைய ஒத்துழைப்பை இரு தரப்பு உறவுகளின் முக்கிய தூணாக அங்கீகரித்த ஜப்பானின் தேசிய பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றை சுட்டிக்காட்டினர்.
5) இரு நாட்டு அமைச்சர்களும் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைசியாக இத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்தினர் அதன்பிறகு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர். அந்த வகையில் பாதுகாப்புக் கொள்கை பேச்சு வார்த்தை, இணை அமைச்சர் அல்லது வெளியுறவு செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை, வெளியுறவு அலுவலக ஆலோசனைகள், ஆயுதங்கள் குறைப்பு மற்றும் ஆயுத பரவல் பேச்சுவார்த்தை, சைபர் பாதுகாப்பு பேச்சு வார்த்தை, இந்தியா ஜப்பான் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு செயல்பாடு பேச்சுவார்த்தை மற்றும் பிராந்திய விவகாரங்கள்குறித்த பேச்சுவார்த்தை ஆகியவை முக்கிய இடம்பெற்றன. இனி எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா, விண்வெளி, கடல் சார் விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் மேலும் இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு பொருளாதாரம் வர்த்தகம் தொடர்பாக ஆழமான பேச்சு வார்த்தைகள் நடத்தவும் ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான கூட்டு செயல்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
6) அதேபோல பிரச்சினைகளை தடுப்பது, உதவி அளிப்பது மற்றும் மறுவாழ்வு மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு WPS Women Peace and Security முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருநாட்டு அமைச்சர்களும் வரவேற்றனர் தொடர்ந்து சர்வதேச அமைதி காப்பு நடவடிக்கைகளில் இருநாட்டு பெண்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
7) இரு நாட்டு அமைச்சர்களும் இருதரப்பு உறவுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக இரு நாட்டு மக்கள் இடையேயான நேரடியான தொடர்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தனர். அந்த வகையில் ஜப்பான் நாட்டின் ஃபியுகோகா நகரத்தில் இந்தியாவின் புதிய தூதரகம் ஒன்றை அமைப்பது குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தை இந்தியாவில் ஜப்பானிய மாதமாகவும் ஜப்பானில் இந்திய மாதமாகவும் கொண்டாடுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
8) இந்திய ஜப்பானிய அமைச்சர்கள் கூட்டாக பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கடுமையாக கண்டித்தனர். தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் – மும்பை தாக்குதல், பதான்கோட் விமானப்படைதள தாக்குதல் மற்றும் இது போன்ற இதர தாக்குதல்களில் தொடர்புடையோரை சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தினர் மேலும் ஐக்கிய நாடுகள் சபையால் பட்டியலிடப்பட்டுள்ள அல்காய்தா, ஐ எஸ் ஐ எஸ், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொஹமது போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை அழிப்பது, பயங்கரவாத இயக்கங்களுக்கான நிதி ஆதாரங்களை தடை செய்வது மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் போக்குவரத்தை நிறுத்துவது ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தினர்.
9) கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இருதரப்பு சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருநாட்டு அமைச்சர்களும் வெகுவாக பாராட்டினர் மேலும் இந்திய விமானப்படை நடத்திய முதல் பன்னாட்டு கூட்டு போர் பயிற்சியில் ஜப்பானிய போர் விமானங்கள் பங்கேற்றதை வரவேற்றனர். மேலும் ஜப்பானில் முதல்முறையாக இந்திய ஜப்பான் விமான படைகள் இடையேயான கூட்டு பயிற்சியான VEER GUARDIAN வீர் கார்டியன் கடந்த ஆண்டு துவங்கப்பட்டதையும், கடந்த ஆண்டு இரு நாடுகள் இடையே முதல் முறையாக முப்படை கூட்டு பயிற்சிகள் நடத்தப்பட்டதையும் வரவேற்றனர் தொடர்ந்து சைபர் மற்றும் விண்வெளி துறைகளில் இன்னும் ஆழமாக இணைந்து செயல்படவும் முடிவு செய்தனர். அதேபோன்று இருதரப்பு மற்றும் பலதரப்பட்ட கூட்டுப் பயிற்சிகளான தர்மா கார்டியன் Dharma Guardian, JIMEX ஜிமெக்ஸ், மலபார் MALABAR ஆகியவற்றை தொடர்ந்து நடத்துவதற்கான தங்களது வலுவான நோக்கத்தையும் முன்வைத்தனர்.
10) இரு நாட்டு அமைச்சர்களும் இந்திய ஜப்பான் ராணுவங்கள் இடையே நடைபெற்ற முதலாவது மூத்த அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை குறித்தும், ரோபோடிக்ஸ் மற்றும் UGV Unmanned Ground Vehicles ஆளில்லா தரை வாகனங்கள், UNICORN மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களின் கையெழுத்து ஆகியவற்றை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா ஜப்பான் இடையேயான ஏழாவது கூட்டு செயல்பாட்டு குழுவின் பேச்சுவார்த்தை குறித்தும் பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஜப்பானிய கடப்படை கப்பல்களின் பராமரிப்பு பணிகளை இந்தியாவில் மேற்கொள்வது குறித்தும், இந்த பசிபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு மூன்றாவது உலக நாடுகளுக்கு பாதுகாப்பு துறையில் உதவி அளிப்பது தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளை இந்தியா ஜப்பான் இடையே நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
11) மேலும் இருநாட்டு அமைச்சர்களும் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியா ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு தீர்மானத்தை தற்போதைய மாறிவரும் கால சூழல் மற்றும் புவிசார் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மாற்றி அமைப்பது குறித்த நோக்கத்தை வெளிபடுத்தி விவாதித்தனர்.
12) கடைசியாக அடுத்த 2+2 இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பை ஜப்பானில் நடத்தவும் அடுத்த ஆண்டு இந்திய பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தை உறுதி செய்யவும் முடிவு செய்தனர்.