மேலும் அதிக அளவில் செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனைகள் நடத்த தயாராகும் இந்தியா !!
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இந்தியா மிஷன் சக்தி என்ற பெயரிலான செயற்கைகோள் எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அன்றைய தினம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது அறிவிப்பில் உலகில் மொத்தம் மூன்று நாடுகளிடம் மட்டுமே அதாவது அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீன ஆகிய நாடுகளிடம் மட்டுமே செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை திறன் இருந்த நிலையில் தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் நான்காவது நாடாக இணைந்துள்ளதாக அறிவித்தார்.
அப்போது இந்த சோதனைக்காக சில வாரங்கள் முன்னரே ஒரு சிறிய இலக்கு செயற்கைக்கோளை ஏவி பூமிக்கு அருகே தாழ்வான வட்டப்பாதையில் நிலை நிறுத்தி இருந்தனர். தொடர்ந்து ஏற்கனவே இந்திய படைகளிடம் பயன்பாட்டில் உள்ள பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையான பிரித்திவியின் மேம்படுத்தப்பட்ட வடிவமான Prithvi Defence Vehicle Mark 2 (PDV MK2) பிருத்வி – 2 செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இலக்கு செயற்கைக்கோளான Microsat R ஏவுகணை மீது மிகத் துல்லியமாக ஏவி தாக்குதல் நடத்தி இந்தியா சாதனை புரிந்தது.
இந்த ஏவுகனையானது H2K – Hit to Kill முறையில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகும். அதாவது அழிப்பதற்கு மட்டுமே தாக்குதல் நடத்துவதற்கு வடிவமைக்கப்பட்டதாகும். ஆகவே இந்த ஏவுகணை தாக்கினால் முற்றிலுமான அழிவு நிச்சயம். தற்போது இந்த ஏவுகணையின் தயாரிப்பு நிலையை பற்றிய தகவல்கள் ஏதும் பொதுவெளியில் இல்லை. மேலும் இந்த ஏவுகணையை தொடர்ந்து சோதனை செய்வதற்கான முடிவுகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதாவது கடைசியாக நடத்தப்பட்ட சோதனையானது ஒரு நிலையான இலக்கை தாக்கி அழிப்பதாக நடத்தப்பட்ட நிலையில் இனி வரும் காலங்களில் மிகவும் கடினமான சவால்களை உள்ளடக்கிய சோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் நகரும் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கான சோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றது குறிப்பிடத்தக்கது.