இந்திய விமானப்படைக்கான பல திறன் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் வெற்றி பெறுவோம் என போயிங் நிறுவனம் நம்பிக்கை !!

இந்திய விமானப்படை தனது வான் தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் விதமாக 114 பல திறன் போர் விமானங்களை வாங்குவதற்கான MRFA Multi Role Fighter Aircraft ஒப்பந்தத்திற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதில் பங்கு பெற்றுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கும் F-15EX Eagle-2 போர் விமானம் தனது திறன்களால் தனித்து நிற்கிறது. ஆகவே அந்த நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போயிங் நிறுவனத்தின் இந்த நம்பிக்கைக்கு காரணம் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு அமெரிக்க அளிக்க முன்வந்த பிறவகை போர் விமானங்களை விடவும் இந்த F-15EX Eagle 2 கனரக போர் விமானம் மிக மிக நவீனமானது. குறிப்பாக அந்த விமானத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அதனுடைய அதிக திறன் காரணமாகவும் மேற்குறிப்பிட்டபடி இதற்கு முன் போயிங் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் தனது F/A-18 EF ரக போர் விமானத்தை அளிக்க முன் வந்த போது அந்த விமானம் பலகட்ட சோதனைகளில் தேர்ச்சி அடையாமல் தோல்வியடைந்தது. அதைவிடவும் இந்த விமானம் நவீனமானது ஆகையால் போயிங் நிறுவனம் இந்த முறை வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து போயிங் நிறுவனம் இந்தியாவிற்கு F-15EX Eagle 2 ரக கனரக போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவையான கட்டாய அனுமதியை பெற்ற நிலையில் இந்திய விமான படையும் தனது 114 கனரக போர் விமானங்கள் ஒப்பந்தத்திற்கு வெளியிட்ட விருப்பம் அறிதல் கோரிக்கைக்கு RFI – Request For Information போயிங் நிறுவனம் பதில் அளிக்கவும் அதைத்தொடர்ந்து இந்திய விமானப்படையுடன் இது தொடர்பான பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளையும் சோதனைகளை நடத்துவதற்கு வழி வகுத்தது. மேற்குறிப்பிட்ட F-15EX Eagle-2 ரக போர் விமானங்கள் ஏற்கனவே அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்புமிக்க F-15 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வடிவமாகும். இந்த விமானம் அதனுடைய அதிக சுமை தூக்கும் திறன் தொலைதூர தாக்குதல் திறன் மற்றும் அதிக வேகம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றதாகும்.

இந்த விமானத்தின் சிறப்புகள் மற்றும் திறன்களை தற்போது பார்க்கலாம், அவையாவன;
◆ வேகம்: Mach 2.5 அதாவது மணிக்கு சுமார் 3100 கிலோமீட்டர் வேகம் இது உலகின் மிக வேகமான போர் விமானம் ஆகும்.
◆ சுமைதிறன்: சுமார் 13.6 டன்கள் அதாவது 13600 கிலோ ஆயுதங்களை சுமக்கும். இது நம்மிடம் இருப்பதிலேயே பெரிய போர் விமானமான ரஷ்ய தயாரிப்பு Su-30MKI போர் விமானத்தை விடவும் சுமார் 5 டன்கள் அதிகமாகும். அதனால் 8 டன்களை மட்டுமே சுமக்க முடியும். இதனால் இது உலகின் அதிக சுமைதிறன் கொண்ட போர் விமானமாகும்.
◆ தாக்குதல் வரம்பு: இந்த போர் விமானம் சுமார் 2222 கிலோமீட்டர் தொலைவு வரை பறந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகும்.
◆ போர் வரலாறு: வளைகுடா யுத்தம், போஸ்னியா யுத்தம், ஆஃப்கானிஸ்தான் யுத்தம், ஈராக் யுத்தம், லிபியா மீதான குண்டுவீச்சு நடவடிக்கை, ஐ.எஸ் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, லெபனான் யுத்தம், காசா யுத்தம் மற்றும் ஏமன் யுத்தம் ஆகியவற்றில் பங்கு பெற்ற நிலையில் இதுவரை விபத்து அல்லாமல் எதிரிகள் தாக்குதலில் ஒரு விமானம் கூட அழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் குறிப்பிட்ட F-15EX Eagle 2 கனரக பல திறன் போர் விமானம் இந்த 114 பலதிறன் போர் விமான ஒப்பந்தத்தில் பங்கு பெற்றுள்ளது இந்த ஒப்பந்தத்திற்கு மற்றும் ஒரு பரிமாணத்தை கொடுக்கிறது. காரணம் என்னவெனில் இந்த விமானம் கனரக விமானம் ஆகும். ஆனால் இந்திய விமானப்படை விரும்புவதோ Dassault Rafale ரஃபேல் போன்ற நடுத்தர ரக விமானங்கள் ஆகும். ஆகவே இந்த விமானம் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல்கள் உள்ளன. எது எப்படி ஆனாலும் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு இந்த F-15 போர் விமானத்தின் மீது அபரிவிதமான மதிப்பு மரியாதையும் உள்ளது என்பது கூடுதல் தகவலாகும்.

ஏற்கனவே அமெரிக்கா, இஸ்ரேல் ,சவுதி அரேபியா, சிங்கப்பூர் ,தென் கொரியா ஆகிய நாடுகள் பழைய F-15 Strike Eagle விமானங்களை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது அமெரிக்கா நமக்கு அளிக்க முன்வந்துள்ள அதே F-15EX Eagle 2 ரக போர் விமானங்களை அமெரிக்க விமானப்படை முதலாவது வாங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து சவுதி அரேபியா ,இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் இந்த வகை விமானங்களை தங்களது தேவைக்கேற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இவற்றை முறையே F-15SA (Saudi Advanced), F-15IA ( Israel Advanced) மற்றும் F-15QA (Qatar Advanced) என அழைப்பது கூடுதல் தகவலாகும்.