இந்தியா மற்றும் ஒமன் கடற்படைகள் இடையேயான 6ஆவது ஆண்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் தலைநகர் தில்லியில் நடைபெற்றது, இது பற்றிய ஊடக அறிவிக்கையை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது, இரு நாட்டு கடற்படைகள் இடையேயான வருடாந்திர அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வரலாற்று சிறப்புமிக்க இருண்டு கடல்சார் நாடுகளுக்கு இடையேயான வலிமையான இருதரப்பு உறவுகளை குறிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமன் அரச கடற்படை அதிகாரிகள் குழுவினர் ஒமன் கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவின் இயக்குனர் கம்மோடர் ஜாஸீம் மொஹமது அலி அல் பலூஷி தலைமையிலும் இந்திய கடற்படை குழுவினர் கம்மோடர் மம்மித் சிங் குரானா தலைமையிலும் இந்த பேச்சுவார்த்தைகளில் தங்களது படைகள் சார்பாக பங்கு பெற்றனர்.
இருதரப்பினரும் கடல்சார் பாதுகாப்பு சவால்கள், கடலில் ஒருங்கிணைந்த செயல்பாடு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், தகவல் தொடர்பு மற்றும் பரிமாற்றம், பல நடவடிக்கை திறன்கள், பயிற்சி, வானிலை மற்றும் நீர்வரைவியல் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர், பின்னர் இந்திய கடற்படையின் தகவல் சேகரிப்பு மையத்தை பார்வையிட்டனர் மற்றும் இந்திய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் தரூண் சோப்தியை சந்தித்து பேசினர்.
வளைகுடா நாடுகளில் இந்தியாயின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒமனும் ஒன்றாகும் இரண்டு நாடுகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்த பயிற்சிகளை மேற்கொள்வதும், இத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதும் சிறப்புமிக்கவை ஆகும்.