பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாக் ராணுவத்துக்கு உதவும் சீன ராணுவம் !!
பாகிஸ்தானுடைய நெருங்கிய கூட்டாளியான சீனா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் விதமாக பல்வேறு உதவிகளை சீன ராணுவத்தை அனுப்பி செய்து வருவதாகவும் மேலும் பல்வேறு வகையான ஆயுதங்களை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இத்தகைய செயல்பாடுகள் கடந்த மூன்று ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.
அதாவது இரும்பு உத்திரங்களை கொண்ட நிலத்தடி பங்கர்களை பாகிஸ்தான் ராணுவத்திற்காக இந்தியா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு அருகே சீன ராணுவ பொறியாளர் படையினர் கட்டி வருகின்றனர் அதேபோல் அந்த பகுதிகளில் அதிநவீன பாதுகாப்பான தகவல்தொடர்பு கோபுரங்கள் மற்றும் நிலத்தடி ஒளியிழை கேபிள்களையும் அமைக்க சீனா உதவி செய்து வருகிறது மேலும் ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளையும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா வழங்கி உள்ளது.
மேலும் சீனாவின் அதிநவீன ரேடார்கள் அதாவது JY மற்றும் HGR வரிசையை சேர்ந்த தாழ்வான உயரம் மற்றும் நடுத்தர உயரங்களில் பறக்கும் பொருட்களை கண்டறியும் ரேடார்கள் நிறுவப்பட்டு உள்ளன இவற்றால் பாகிஸ்தானுடைய வான் பாதுகாப்பு திறன்கள் வலுவடைந்துள்ளன அதே போல் SH-15 எனும் 155mm வாகன பிரங்கிகளும் இந்தியா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு அருகே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன இவையனைத்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா CPEC என்ற பெயரில் செய்துள்ள முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் ஆகும்.
அதாவது பாகிஸ்தானுடைய பலுச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள க்வதர் துறைமுகத்தை சீனா ஆக்கிரமத்துள்ள ஸின்ஜியாங் மாகாணத்துடன் இணைக்கும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அதாவது China Pakistan Economic Corridor பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக காரகோரம் நெடுஞ்சாலை மூலமாக செல்கிறது இதில் சீனா ஏராளமான பணத்தை கொட்டி உள்ளது ஆகவே இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அடைய கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் இவற்றை செய்து வருகிறது.
அதன் மற்றொரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லீப்பா பள்ளதாக்கு பகுதியில் மலையை குடைந்து ஒரு சுரங்க பாதையை அமைக்க சீன வல்லுனர் குழு பணிகளை துவங்கி உள்ளது இந்த சுரங்கம் காரகோரம் நெடுஞ்சாலையில் சென்று இணையும், தவிர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன தொலைபேசி நிறுவனம் அடுத்த தலைமுறை மொபைல் சேவைகளை வழங்க பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது இதற்காக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றை சீனா மொபைல் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்கி சைனா மொபைல் பாகிஸ்தான் CMPak என்ற நிறுவனத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய ராணுவம் இந்த விவகாரத்தை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை ஆனால் உளவுத்துறைகள் தொடர் கண்காணிப்பு மற்றும் உளவுப்பணிகளில் ஈடுபட்டு தகவல்களை சேகரித்து வருகின்றன, இந்தியா தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறிப்பாக அங்குள்ள கில்ஜித் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளில் சீன ராணுவ செயல்பாடுகளுக்கு மிக கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது,மேலும் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள இந்தியா விழிப்புடன் இருப்பதாக அதிகாரிகள் கூறுவது கூடுதல் தகவல் ஆகும்.