மணிப்பூரில் இரண்டு CRPF வீரர்கள் வீரமரணம் !!
கடந்த சனிக்கிழமை அன்று மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நரேன்செனா பகுதியில் அதிகாலை நேரம் மோய்ராங் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் காவல்துறையின் IRBn – India Reserve Battalion அதாவது இந்தியா ரிசர்வ் பட்டாலியன் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த முகாமில் தங்கியிருந்த 128ஆவது CRPF படையணியின் காவல்சாவடியும் தாக்குதலுக்கு உள்ளானது அதாவது மலைகளில் இருந்து கொண்டு குக்கி பயங்கரவாதிகள் முகாம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர் மேலும் குண்டுகளையும் வீசினர். இரவு 12.30 மணி முதல் 2.15 மணி வரை சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் இரண்டு CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரமரணம் அடைந்த வீரர்களின் விவரங்கள் பின்னர் வெளியிடப்பட்டது, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த துணை ஆய்வாளர் சர்கார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தலைமை காவலர் அருப் சைனி ஆகியோர் தான் வீரமரணம் அடைந்துள்ளனர் மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் மணிப்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது அவர்களின் பெயர்களாவன ஆய்வாளர் ஜாதவ் தாஸ் மற்றும் காவலர் அஃப்தாப் தாஸ். மேலும் தாக்குதலை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் அந்த பகுதி முழுவதும் தேடுதல் பணி துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.