ரஷ்யா விரைவில் இந்தியாவுக்கு ஒரு போர் கப்பலையும் அடுத்த ஆண்டு இந்தியா ஆர்டர் செய்த மீதமுள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளையும் டெலிவரி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இவை இந்திய படைகளில் இணையும் போது கடல்சார் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை இவற்றின் டெலிவரியை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்திய கடற்படைக்கான மேம்படுத்தப்பட்ட நான்கு ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக கப்பல்களுக்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது அந்த வகையில் முதல் இரண்டு கப்பல்கள் ரஷ்யாவிலும் மீதமுள்ள இரண்டு கப்பல்கள் இந்தியாவிலும் கட்டப்பட்டு வருகின்றன, ரஷ்யாவில் உள்ள இரண்டு கப்பல்களும் இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன, அவற்றில் முதலாவது கப்பல் துஷில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்யப்படும் எனவும் இரண்டாவது கப்பல் தமால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டெலிவரி செய்யப்படும் எனவும் ரஷ்ய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இந்த கப்பல்கள் கடந்த 2022ஆம் ஆண்டே டெலிவரி செய்யப்பட்டிருக்க வேண்டியை ஆகும்.
அதே போல இந்திய விமானப்படைக்கான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளில் கடைசி இரண்டு அமைப்புகள் அடுத்த ஆண்டு டெலிவரி செய்யப்படும் எனவும் இந்த டெலிவரியில் உக்ரைன் போர் காரணமாக தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக தாமதம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அழுத்தம் என பல்வேறு சிக்கல்களுக்கு இடையே இந்தியா 5.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை கடந்த 2018ஆம் ஆண்டு செய்து கொண்டதும் முதல் மூன்று அமைப்புகள் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட இரண்டு மேம்படுத்தப்பட்ட தல்வார் ரக கப்பல்களும் இந்திய கடற்படையில் இணையும் போது இந்திய கடற்படையில் பலம் கணிசமாக அதிகரிக்கும் மேலும் இவை இந்திய கடற்படையின் முன்னனி போர் கப்பல்கள் வரிசையில் இடம்பெறும். இந்த கப்பல்களால் வான் பாதுகாப்பு, கப்பல் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் மேலும் இவற்றால் ஒரு கடல்சார் த்ரூவ் மார்க்-3 Dhruv Mk3 அல்லது ஒரு Ka-28 அல்லது ஒரு Ka-31 ரக ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லவும் முடியும், ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய 6 தல்வார் ரக கப்பல்கள் இந்திய கடற்படையில் உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.
S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை பொறுத்தவரையில் இந்தியாவின் மேற்கு வடக்கு மற்றும் கிழக்கு எல்லையோர பகுதிகளில் வான் பாதுகாப்பு திறன்களை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றால் மிகையாகாது. இந்த அமைப்பு ஒரு பல கட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும் காரணம் 40 கிலோமீட்டர், 120 கிலோமீட்டர், 150 கிலோமீட்டர், 200 கிலோமீட்டர், 240 கிலோமீட்டர் , 400 கிலோமீட்டர் ஆகிய தொலைவுகளில் வரும் அனைத்து வகையான வானூர்திகள், ஏவுகணைகள் ஆகியவற்றை தடுத்து அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.