இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக மற்றொரு புதிய கூட்டணி ??

ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒன்றினைந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளுடன் புதிய பாதுகாப்பு கூட்டுறவை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக ஜப்பானிய ஊடகமான க்யோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த ஐந்து நாடுகளும் மேற்குறிப்பிட்ட புதிய ஒப்பந்தத்தின்படி இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை பன்மடங்கு அதிகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுபயணமாக செல்லும் ஜப்பானிய பிரதமர் ஃபியூமியோ கிஷிடா அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் போது இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு இருதரப்பு அறிக்கை வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா அமெரிக்கா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து க்வாட் எனும் கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டு தோறும் மலபார் என்ற பெயரில் மிக பிரமாண்டமான கடற்படை பயிற்சிகளை நடத்தி வருவதும்

அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ஆக்கஸ் என்ற பெயரில் சீனாவுக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை கட்ட உதவுகின்றன, இதன் மூலம் உலகிலேயே அணு ஆயுதம் இல்லாத நாடு ஒன்று அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை பெறுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

இந்த மூன்று கூட்டணிகளுமே இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரிக்கும் ஏதேச்சதிகார மனோபாவத்தை கருத்தில் கொண்டு அதை எதிர்க்கவும் வலு குறைந்த நாடுகளுக்கு வலு அளிக்கவும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கங்களையும் அது சார்ந்த புவிசார் அரசியல் விளையாட்டுகளையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.