சிரிய தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் மிக மூத்த ஈரானிய அதிகாரிகள் மரணம் !!

சீரிய தலைநகர் டமாஸ்கஸில் ஈரானிய தூதரகம் மற்றும் கனேடிய தூதரகம் இடையே அமைந்துள்ள ஒரு கட்டிடத்தை சரமாரியாக திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் குண்டுவீசி தாக்கியது, மாஸ்ஸேஹ் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்த கட்டிடம் இந்த தாக்குதலில் முற்றிலும் அழிக்கப்பட்டு தரைமட்டமாகி உள்ளது.

இதில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர், அவர்களில் 8 ஈரானியர்கள், 2 சீரியர்கள் மற்றும் 1 லெபனானியர் அடங்குவர் மேலும் கொல்லப்பட்ட ஈரானியர்களில் இதில் ஈரானின் குத்ஸ் படையின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் மொஹமது ரேசா ஸேஹிதி மற்றும் அவரது துணை தளபதியான பிரிகேடியர் ஜெனரல் மொஹமது ஹாதி ஹஜ்ரியாஹிமி ஆகிய மூத்த ஈரானிய தளபதிகளும் அடங்குவர்.

இந்த தாக்குதல் தற்போது ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, சவுதி ஒமன் ஜோர்டான் பாகிஸ்தான் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அந்த பிராந்தியத்தை ஒட்டியுள்ள இஸ்லாமிய நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன, மேலும் சிரியாவும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது, ரஷ்யாவும் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது, அமெரிக்கா நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹோசைன் அமிராப்தொல்லாஹியன் இந்த தாக்குதல் அனைத்து சர்வதேச விதிமுறைகளுக்கும் எதிரானது என கூறியுள்ளார் காரணம் இஸ்ரேல் பல முறை சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல்கள் நடத்தி இருந்தாலும் இதுவரை ஈரானுடைய தூதரக பகுதிகளை தாக்கியது இல்லை மேலும் சர்வதேச விதிமுறைகளின்படி ஒரு நாட்டின் தூதரக பகுதி மீது தாக்குதல் நடத்த கூடாது அதனை முற்றிலும் மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹசன் கனானி கூறும்போது இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரானுக்கு முழு அதிகாரம் உண்டு எனவும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்த தாக்குதல் அனைத்து சர்வதேச விதிமுறைகள் ஐ.நா விதிகள் ஆகியவற்றை மீறி நடத்தபட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் லெபனானை சேரந்த பயங்கரவாத குழுவான ஹெஸ்புல்லா கொல்லப்பட்ட ஈரானிய அதிகாரி ஸாஹேதியின் தியாகம் மற்றும் அவரது பணிகள் மறக்கப்படாது நிச்சயமாக இதற்கு பதிலடி கொடுப்போம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் எய்லாத் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் கடற்படையின் மிக முக்கியமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் தொடர்ந்து ஈரான் அந்த பிராந்தியம் முழுவதும் உள்ள தனது ஆதரவு குழுக்களை ஏவி விடலாம் எனவும் இதனால் அந்த பிராந்தியத்தில் பெரும் அமைதி சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவிக்கன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.