ஈரான் தனது புதிய அதாவது மேம்படுத்தப்பட்ட BAVAR – 373 பவார் – 373 தொலைதூர வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஈரானிய ராணுவத்தில் இணைக்கப்பட்ட BAVAR-373 வான் பாதுகாப்பு அமைப்பின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். ஈரானிய ராணுவ அதிகாரிகள் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தொலைதூர வான் பாதுகாப்பு அமைப்பால் அமெரிக்காவின் ஸ்டெல்த் விமானங்களை கூட கண்டறிந்து அழிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பு முழுக்க முழுக்க ஈரானிலேயே தயாரிக்கப்பட்டதாகும் இதன் திறன்கள் ரஷ்யாவின் S-300, அமெரிக்காவின் PATRIOT மற்றும் வேறு சில தொலைதூர வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இணையாக கருதப்படுகிறது. இந்த புதிய மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பை ஈரான் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது உலகிற்கு அறிமுகம் செய்ததது, சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
ஈரானிய அதிகாரிகளை பொறுத்தவரை இந்த புதிய மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பானது ஈரானுடைய பாதுகாப்பு தொழில் துறை அடைந்து வரும் வளர்ச்சி, பாதுகாப்பு துறையில் படிப்படியாக அடைந்து வரும் தற்சார்பு மற்றும் ஈரானுடைய மிகப்பெரிய கனவுகளில் ஒன்றான அதிநவீன வான் பாதுகாப்பு கட்டமைப்புக்கான லட்சிய பணிகளை சுட்டி காட்டுவதாக மேற்கத்திய பத்திரிகை ஊடகமான SOFREP செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த பத்திரிக்கை மேற்குறிப்பிட்ட BAVAR 373 வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவின் S-400 அமைப்பை விடவும் அதிநவீனமானது எனவும் ஒரே நேரத்தில் 100 இலக்குகளை அடையாளம் கண்டு தனது Sayyad 4B சயாத்-4பி ரக ஏவுகணைகளை கொண்டு அழிக்கும் ஆற்றல் கொண்டது எனவும் இதன் தாக்குதல் வரம்பு 186 மைல்கள் எனவும் 76 மைல்கள் உயரம் செல்லும் எனவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த வான் பாதுகாப்பு அமைப்பால் அமெரிக்காவின் F-22 , F-35 போன்ற ஸ்டெல்த் போர் விமானங்களை கூட அடையாளம் கண்டு அழிக்க முடியும் எனவும் ஆனால் அதே நேரத்தில் ஈரானின் இந்த கருத்துக்கள் நம்பகமானவையா என்கிற சந்தேகத்தையும் அந்த பத்திரிகை எழுப்பியுள்ளது, ஆனால் இந்த அமைப்பை தற்போது அறிமுகம் செய்ததன் நோக்கம் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக தான் என்பதை மறுக்க முடியாது.