முதல்முறையாக சுமார் 21,000 கோடியை கடந்த இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி !!
இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2023-2024 நிதியாண்டில் சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன மேலும் இது கடந்த ஆண்டை விட சுமார் 32.5 மடங்கு அதிகம் என்ற தகவலும் வெளியாகி உள்ளன, மேலும் கடந்த பத்தாண்டுகளில் இது சுமார் 31 முறை வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஏற்றுமதியில் தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 60 சதவிகிதம் அளவுக்கு பங்களிப்பு செய்துள்ளன அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மீதமுள்ள 40 சதவிகித அளவுக்கு பங்களிப்பு செய்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, மேலும் இந்தியா இத்தகைய ஏற்றுமதி வளர்ச்சி அடைந்திருந்தாலும் சுமார் 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் கூட ஒட்டுமொத்த உலகளாவிய ராணுவ வர்த்தகத்தை பொறுத்தமட்டில் நமது வியாபாரம் ஒரு சிறிய புள்ளி தான் என்பதும், இந்தியா உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்தியா தற்போது பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணைகள், பினாகா பலகுழல் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராக்கெட்டுகள், கடலோர ரோந்து கலன்கள், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ATAGS பிரங்கிகள், டோர்னியர் மற்றும் த்ரூவ் வானூர்திகள், இரவில் பார்க்கும் கருவிகள், சிமுலேட்டர்கள், இலகுரக நீரடிகணைகள், இலகுரக கவச வாகனங்கள், பல வகையான ரேடார்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் குண்டுகள், குண்டு துளைக்காத உடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மத்திய அரசு 2025ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் பாதுகாப்பு துறை ஏற்றுமதியை இலக்காக வைத்த நிலையில் தற்போது ஏறத்தாழ சுமார் 86 சதவிகிதம் அதாவது 31000 கேடி ரூபாயை தொட்டுள்ளது மேலும் 2004-2014 (4312 கோடி ரூபாய்) ஆண்டு காலகட்டத்தையும் 2014-2024 (88,319 கோடி ரூபாய்) காலகட்டத்தையும் ஒப்பிடுகையில் சுமார் 21 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு துறை இதுபற்றி வெளியிட்டு உள்ள அறிக்கையில் பல்வேறு கொள்கை ரீதியான மாற்றங்கள், தொழில் ஆதரவு மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இந்த அபரிமிதமான ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.