இந்திய விமானப்படை 6 எரிபொருள் டேங்கர் விமானங்களை வாங்குவதற்காக உலகளாவிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளதாகவும் இது தொடர்பான நிபந்தனைகள் தொழில்துறையுடன் பகிரப்பட்டு உள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, ஏற்கனவே இந்த திட்டம் மிகவும் நீண்ட காலமாக சரியான முடிவுகள் எட்டப்படாமல் கிடப்பில் உள்ளது.
இந்த விமானங்கள் எந்தவொரு விமானப்படைக்கும் தேவை காரணம் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் வழங்கும் சிறப்புவாய்ந்த விமானங்கள் ஆகும், இதனால் வானூர்திகள் மீண்டும் பறந்து வந்து விமானப்படை தளத்தில் தரை இறங்கி எரிபொருள் நிரப்பி மீண்டும் புறப்பட்டு சென்றடைய ஆகும் நேரம் போன்ற நேர விரயங்களை தவிர்க்க முடியும்.
தற்போது இந்திய விமானப்படை IL-78 ரக டேங்கர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது, இவை சோவியத் ஒன்றிய காலகட்ட தயாரிப்பாகும் மேலும் இவை அனைத்தும் 30 ஆண்டுகள் பழமையானவை, ஆகவே தற்போது இந்திய விமானப்படை அமெரிக்க அல்லது ஐரோப்பிய டேங்கர் விமானங்களை பெற எண்ணுகிறது இவற்றை Buy Global எனும் பிரிவின் கீழ் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அமெரிக்க தயாரிப்பு என்றால் போயிங் நிறுவன தயாரிப்பு தான் அதுவும் சிவில் போக்குவரத்து விமானங்களை மாற்றியமைத்து விற்பனை செய்கின்றனர், அமெரிக்காவின் போயிங் KC-46 PEGASUS மாற்றியமைக்கப்பட்ட போயிங் 767 விமானம் ஆகும் அதே போல் ஐரோப்பிய தயாரிப்பு என்றால் ஏர்பஸ் நிறுவனத்தின் A330 விமானத்தின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகும்.
அதே நேரத்தில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இஸ்ரேலின் Israel Aerospace Industries நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது அதன்படி இந்திய விமானப்படைக்கு முன்னாள் ஏர் இந்தியா விமானங்களை வாங்கி அவற்றை எரிபொருள் டேங்கர் விமானங்கள் ஆக மாற்றியமைத்து வழங்க வேண்டும் என்பது நோக்கமாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்த முன்மெழிவுக்கு இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் தான் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எனும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதான கொள்முதல் முடிவுகளை எடுக்கும் கவுன்சில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய விமானங்கள் இந்திய விமானப்படை இருமுனை போர் போன்ற சூழல்களை கையாள மிகவும் இன்றியமையாதவை என்பது கூடுதல் தகவல் ஆகும்.