மீண்டும் இந்தியா நோக்கி வந்த ரஷ்ய கப்பலை தாக்கிய ஹூத்தி பயங்கரவாதிகள் !!

  • Tamil Defense
  • April 30, 2024
  • Comments Off on மீண்டும் இந்தியா நோக்கி வந்த ரஷ்ய கப்பலை தாக்கிய ஹூத்தி பயங்கரவாதிகள் !!

ஈரானின் உதவி பெற்ற ஏமனின் ஹூத்தி பயங்கரவாதிகள் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கப்பல்கள் அல்லது இந்நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலானாலும் செங்கடல் வழியாக அரேபிய கடலுக்கு செல்லும் போது அவற்றை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள் ஆகியவற்றை கொண்டு தாக்கி வருகின்றனர்.

இதை தொடர்ந்து இத்தகைய செயல்களை தடுக்க அமெரிக்கா தலைமையில் பல மேற்கத்திய நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளும் ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற பெயரில் போர் கப்பல்களை அனுப்பி ஹூத்திக்களின் தாக்குதல் மற்றும் ஹூத்திகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தனியாக இந்தியா சவுதி சீனா எகிப்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன எனினும் அவ்வப்போது வணிக கப்பல்கள் மீது ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இந்தியாவின் வாடினார் துறைமுகத்தை நோக்கி ரஷ்யாவின் ப்ரிமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த MV Andromeda Star ஆண்ட்ரோமெடா ஸ்டார் எனும் டேங்கர் கப்பல் மீது ஹூத்திக்கள் ஏவிய ஏவுகணைகள் மோதி சேதத்தை ஏற்படுத்தி உள்ளன இதை அந்த கப்பலின் கேப்டன் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதற்கு ஹூத்திக்களின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா மேற்குறிப்பிட்ட கப்பல் பிரிட்டன் நாட்டை சேர்ந்தது என கூறியுள்ளார் ஆனால் கப்பல் தற்போது ரஷ்ய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் முன்னர் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது செஷல்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் லண்டன் பங்கு சந்தை குழுமம் LSEG – London Stock Exchange Group தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.