பிரம்மாஸ் டெலிவரிக்கு முன்னதாக ஃபிலிப்பைன்ஸை ஒட்டி பறந்த சீன கண்காணிப்பு ட்ரோன் !!
1 min read

பிரம்மாஸ் டெலிவரிக்கு முன்னதாக ஃபிலிப்பைன்ஸை ஒட்டி பறந்த சீன கண்காணிப்பு ட்ரோன் !!

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்தது, இந்த டெலிவரிக்கு ஃபிலிப்பைன்ஸ் தயாராகி கொண்டிருக்கும் போதே மேற்கு ஃபிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ராஃபி டிமா எனும் ஊடகவியலாளர் பார்வையில் பறந்து கொண்டிருந்த சீன ராணுவத்தின் WZ-7 ரக கண்காணிப்பு ட்ரோன் பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன, இந்த ட்ரோன் பறந்து கொண்டிருந்த பகுதி தென்சீன கடல்பகுதிக்கு உட்பட்ட வடமேற்கு ஃபிலிப்பைன்ஸிற்கு அருகேயான பகுதியாகும்.

மேற்குறிப்பிட்ட சீன ராணுவத்தின் WZ-7 ரக ட்ரோன் சீன விமானப்படை மற்றும் சீன கடற்படை ஆகியவற்றால் பயன்படுத்தி வரப்படுகிறது, இந்த ட்ரோனால் சுமார் 60,000 அடி உயரம் மற்றும் 4350 மைல்கள் தொலைவு வரை பறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது மேலும் இந்த ட்ரோன் தொடர்ந்து 10 மணி நேரம் பறக்கும் என கூறப்படும் நிலையில் சில நிபுணர்கள் இந்த ட்ரோனால் அதற்கு அதிகமான நேரம் பறக்க முடியும் என சந்தேகிக்கின்றனர்.

சீன ட்ரோன் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகே பறந்துள்ள சமயம் மிக மிக முக்கியமான நேரமாக பாரக்கப்படுகிறது இதற்கு காரணம் இதற்கு பிறகு தான் இந்தியா பிரம்மாஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்துள்ளது, அதே போல் ஃபிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க படைகள் இடையேயான வருடாந்திர பாலிக்கட்டான் போர் பயிற்சிகள் துவங்க உள்ளன, மேலும் லூசான் தீவில் அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது மற்றும் தற்போது ஃபிலிப்பைன்ஸ் இரண்டாவது தாமல் மணல் திட்டு மற்றும் ஸ்கார்போரோ மணல் திட்டு ஆகிய பகுதிகளை சீனா தனக்கு சொந்தம் என கூறி மீண்டும் பிரச்சினை செய்து வருவது ஆகியவை இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மூன்று பிரம்மாஸ் பேட்டரிகளை டெலிவரி செய்துள்ளது, ஒவ்வொரு பேட்டரியிலும் தலா மூன்று ஏவு அமைப்புகள் இருக்கும் ஒவ்வொரு ஏவு அமைப்பிலும் தலா இரண்டு அல்லது மூன்று ஏவுகுழாய்கள் இருக்கும். ஃபிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கான ஹோரைசான்-2 நவீனமயமாக்கல் திட்டத்திற்காக இரு நாட்டு அரசுகள் நேரடியாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேற்குறிப்பிட்ட ட்ரோன் தைவான் அருகேயும் தென்பட்டுள்ளது தைவானிய படைகள் மேற்கொள்ளும் போர் ஒத்திகைகள் மற்றும் வழக்கமான ராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றை கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன்கள் தைவான் எல்லைக்குள் சீன ராணுவத்தால் அத்துமீறி இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது, அவ்வப்போது தைவானிய ராணுவம் சீன ஆளில்லா விமானங்களின் அத்துமீறிய செயல்பாடுகள் பற்றிய ஊடக அறிவிக்கைகளை வெளியிடுவது வழக்கமாகும்.