இந்தியாவில் முதல்முறையாக இங்கிலாந்து கடற்படை கப்பல்களின் பராமரிப்பு !!

  • Tamil Defense
  • April 6, 2024
  • Comments Off on இந்தியாவில் முதல்முறையாக இங்கிலாந்து கடற்படை கப்பல்களின் பராமரிப்பு !!

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னை அருகே அமைந்துள்ள Larsen & Toubro லார்சென் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் காட்டுபள்ளி கப்பல் கட்டுமான தளத்திற்கு இங்கிலாந்து கடற்படையின் ஒரு பிரிவான RFA- Royal Fleet Auxillary அதாவது உதவி கப்பல்கள் படைப்பிரிவை சேர்ந்த இரண்டு கப்பல்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்தடைந்தன.

RFA ARGUS ஆர்கஸ் மருத்துவ வசதிகள் மற்றும் வான் நடவடிக்கை ஆதரவு கப்பலாகும் (Primary Casualty Evacuation & Aviation Support) மற்றும் RFA LYME BAY லைம் பே Landing Ship Dock எனப்படும் நிலநீர் போர்முறை கப்பலாகும் அதாவது வீரர்கள் கவச வாகனங்கள் அல்லது டாங்கிகளை சுமந்து சென்று எதிரிகளின் கரையோர பகுதிகளில் இறக்கி விடும் கப்பல், மேற்குறிப்பிட்ட இரு கப்பல்களும் இங்கிலாந்து கடற்படையின் Littoral Response Group (south) அதாவது கடலோர நடவடிக்கை குழு (தெற்கு) எனப்படும் பிரிவின் அங்கமாகும்.

இவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் சூயஸ் கால்வாய் வழியாக அரபிக்கடல் பகுதியில் நுழைந்து ஒமன் நாட்டின் துக்கம் நகரில் அமைந்துள்ள இங்கிலாந்து ராணுவ தளத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இந்தியா வரும் வழியில் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படையுடன் பயிற்சிகளை நிறைவு செய்து சென்னை காட்டுபள்ளியை வந்தடைந்தன.

இந்த குழுவின் பிரதான அங்கமாக இந்த இரண்டு கப்பல்கள் மூன்று மெர்லின் ஹெலிகாப்டர்கள் ராயல் மரைன்படையின் 40ஆவது கமாண்டோ படையணி, கமாண்டோ சப்ளை படையணி, 30ஆவது கமாண்டோ உளவு படையணி, இங்கிலாந்து தரைப்படையின் 24ஆவது கமாண்டோ பொறியியல் படையணி, 29ஆவது கமாண்டோ பிரங்கி படையணி ஆகியவற்றை சேர்ந்த 500 பிரிட்டிஷ் வீரர்கள் மற்றும் 120 நெதர்லாந்து மரைன் வீரர்கள் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர், இந்த குழு இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கு பொறுப்பானதாகும்.

இந்த கப்பல்கள் இந்தியா வந்தடைந்தது பற்றி பேசிய இந்தியாவுக்கான இங்கிலாந்து துணை தூதர் ஆலிவர் பால்ஹாட்ச்செட் இந்தியாவுக்கு வந்து இங்கிலாந்து கடற்படை கப்பல்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது இதுவே முதல்முறை எனவும் இது இந்தியா இங்கிலாந்து -2030 திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது எனவும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய இங்கிலாந்தின் புரிதலை வெளிப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் ஏற்கனவே காட்டுபள்ளி கப்பல் கட்டுமான தளத்தில் பல அமெரிக்க கடற்படை கப்பல்கள் மற்றும் கலன்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதும் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமெரிக்க கடற்படைக்கான மிக முக்கியமான பராமரிப்பு மையமாக மாற்றம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.