இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் முதல் நார்வே போலந்து லித்துவேனியா ரோமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் Steadfast Defender எனும் பெயரில் ஒரு பிரமாண்ட போர் பயிற்சியில் நேட்டோ ஈடுபட்டு வருகிறது.
இந்த பயிற்சிகளின் நோக்கம் ரஷ்யா உடன் போர் மூண்டால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வது ஆகும் இதற்காக 31 நேட்டோ நாடுகளில் இருந்து சுமார் 90,000 வீரர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் குவிந்துள்ளனர்.
ஜெர்மனி 12,000 வீரர்களை இந்த பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது இது ஜெர்மனியின் ராணுவ பலத்தில் ஆறு சதவீதம் ஆகும், குளிர் பிரதேசம் மற்றும் கடும் பனிப்பொழிவிலும் கூட போர் நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த பயிற்சிகளின் முக்கிய அங்கமாகும்.
மேலும் கூடுதலாக பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளின் 50 போர் கப்பல்கள் மற்றும் ஏறத்தாழ 80 பல வகையான போர் விமானங்கள் இதில் பங்கு பெற்றுள்ளன, நான்கு மாதம் நடைபெறும் இந்த பயிற்சிகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நேட்டோ ராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.