லட்சத்தீவில் இந்திய கடற்படையின் தளம், பிரம்மாஸ் ஏவுகணைகள்; சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இந்தியா வைத்த செக் !!

இந்திய படைகளை மாலத்தீவு நாட்டில் இருந்து அந்நாட்டு அரசு வெளியேற உத்தரவிட்டு இந்திய படைகள் வெளியேறியன, இதற்கு பின்னில் சீனாவின் கை உள்ளது என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் செக் வைக்கும் விதமாக இந்தியா தனது மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள லட்சத்தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ள மினிக்காய் தீவில் INS JATAYU ஜடாயு என்ற பெயரில் கடற்படை தளம் ஒன்றை கடந்த 6ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தது.

இந்த தீவு உலக கடல்சார் வர்த்தக வழித்தடத்திற்கு மிகவும் அருகே அமைந்துள்ளது மற்றுமொரு பலமாகும், இதனால் அரபிய கடல்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் போதை மருந்து கடத்தல் மற்றும் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு வரப்பிரசாதம் ஆகும், மேலும் சீனாவின் ஆதரவோடு செயல்படும் மாலத்தீவு நாட்டையும் அங்கு சீன நடவடிக்கைகளையும் கண்காணிக்க இது உதவும்.

1960களில் இந்த மினிக்காய் தீவில் ஒரு சிறிய கடற்படை நிலையம் அமைக்கப்பட்டது இன்று அது ஒரு பெரிய தளமாக உருமாற்றம் அடைந்துள்ளது, இங்கு அதிநவீன ரேடார்கள் உள்ளிட்ட பல புதிய அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் எதிர்காலத்தில் Boeing P8I தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் மற்றும் MQ-9B டிரோன் ஆகியவற்றை இயக்கும் அளவுக்கு விமான தளமும், விமானந்தாங்கி கப்பல்களையே நிறுத்தும் அளவுக்கு துறைமுக வசதிகளையும் ஏற்படுத்த திட்டம் உள்ளதாக கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் இங்கு 450 கிலோமீட்டர் தொலைவு பாயும் அதிநவீன பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் நிறுவப்பட உள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக இந்த தளம் எதிரி போர் கப்பல்களுக்கு பெரும் அபாயமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்த தளம் அரபிக்கடலில் இந்திய பெருங்கடலின் வாயிலில் அமைந்துள்ளது, இந்த தளத்தின் முதல் கட்டளை அதிகாரியாக கமாண்டர் விராட் பாகெல் நியமிக்கப்பட்டுள்ளார், இவர் தென் பிராந்திய கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள லட்சத்தீவு கடற்படை பொறுப்பு அதிகாரியின் கீழ் பணியாற்றுவார்.

தற்போது இந்திய கடற்படைக்கு கிழக்கில் அந்தமான் தீவுக்கூட்டத்தின் தெற்கில் உள்ள INS BAAZ கடற்படை தளமும், மேற்கில் லட்சத்தீவுகளின் தெற்கு முனையில் உள்ள INS JATAYU ஆகிய தளங்கள் இந்தியாவின் கண்கள் மற்றும் காதுகளாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.