பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி ஏவுகணை இந்தியாவின் மிக வலிய பேரழிவு ஆயுதம் !!

கடந்த மார்ச் 11ஆம் தேதி இந்தியா பாதுகாப்பு துறையில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது அதாவது ஒரே ஒரு ஏவுகணையில் பல அணு ஆயுதங்களை ஏவும் திறனை அளிக்கும் MIRV – Multiple Independent Re-entry Vehicle தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது, இதனை பெரும் சாதனை என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.

பொதுவாக நம்மிடம் அக்னி-1 முதல் அக்னி-5 வரையுள்ள அனைத்து ஏவுகணைகளும் ஒரேயொரு அணு ஆயுதத்தை சுமக்கும் திறன் கொண்டவையாகும், இந்த நிலையில் நம்மிடம் உள்ளதிலேயே அதிக தூரம் செல்லும் திறன் கொண்ட அக்னி -5 AGNI-5 ஏவுகணையில் முதல் முறையாக ஒன்றுக்கும் அதிகமான அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் அளிக்கும் MIRV தொழில்நுட்பம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு அணுஆயுதம் சுமக்கும் அக்னி -5

அதாவது அக்னி-5 ஏவுகணையின் சுமை திறன் 4000 கிலோ அதாவது 4 டன் ஆகும், இதில் 1-12 அணு ஆயுதங்கள் வரை வைத்து ஏவ முடியும், அதாவது 4 டன் எடை கொண்ட ஒரே அணு ஆயுதம் அல்லது எத்தனை அணு ஆயுதங்கள் வைக்கப்படுகிறதோ அவற்றின் எண்ணிக்கையை கொண்டு 4000 வகுத்தால் என்ன தொகை கிடைக்குமோ அது தான் தலா ஒரு அணு ஆயுதத்தின் எடையாகும் (எ.கா. 4000÷12=333, 4000÷10=400).

ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகளை வைக்க உதவும் விதமாக அக்னி-5 ஏவுகணையின் மூக்கு பகுதி வழக்கமான கூர்மையான அமைப்பில் இருந்து குவிமாடம் போன்ற அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது, மேலும் ஒவ்வொரு அணு குண்டும் ஒன்றிலிருந்து சுமார் 100 – 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றோரு இலக்கை நோக்கி பாயும் வகையிலும் மேலும் தேவைப்பட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ஒரே இலக்கை நோக்கி பாயும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பழைய அக்னியின் ஏவுகணையின் கூரிய முனை

இப்படி ஒரே ஏவுகணையில் பல அணு ஆயுதங்களை வைத்து ஏவுவதால் அவற்றை இடைமறிப்பது மிகவும் கடினமாகும் அதே நேரத்தில் எதிரி நாட்டின் மீதான தாக்குதல் எப்படி ஆயினும் உறுதிப்படுத்தப்படும் காரணம் இவை தானாகவே எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி செல்லும் திறன் கொண்டவை ஆகும் கூடுதலாக Decoy எனப்படும் அணு குண்டுகளை போன்ற போலிகளும் இருக்கும் இவற்றை எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கும் நேரத்தில் உண்மையான குண்டுகளை இலக்குகளை தாக்கி அழித்துவிடும்.

புதிய அக்னியின் உருண்ட முனை

இந்த அணு ஆயுதங்கள் விண்வெளியில் இருந்து வளிமண்டலத்தில் நுழையும் போது சுமார் 4000℃ வெப்பத்தை சந்திக்க நேரிடும் வழக்கமான உலோகம் எனில் விண்ணிலேயே உருகி அங்கேயே வெடித்து விடும் ஆகவே ஒரு அதிரகசியமான Composite உலோகம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் கடந்த காலங்களில் ஏவுகணையின் தொலைவை அதிகரிக்கும் பொருட்டு எடையுள்ள பகுதிகளில் இலகுவான உலோக பாகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை 5000 கிலோமீட்டர் மட்டுமே செல்லும் என இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் சீன பாதுகாப்பு வல்லுநர்கள் இதனால் 8000 கிலோமீட்டர் தொலைவு வரை செல்ல முடியும் என கூறுகின்றனர், Business Standard பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி தேவைப்பட்டால் இதன் தொலைவை அதிகரிக்க முடியும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும், இதுவரை அமெரிக்கா, சோவியத் ஒன்றியம்/ ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும் சீனா மட்டுமே இந்த திறனுடைய நாடுகளாக இருந்த நிலையில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

இதன் காரணமாக தற்போது இந்தியாவின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய பேரழிவு ஆயுதம் உள்ளது, இனி இந்தியாவின் எதிரி நாடுகள் இந்தியா மீதான தங்களது அணு ஆயுத தாக்குதல் கொள்கையை மீண்டும் பரிசீலனை அல்லது மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது, இது நமது தற்காப்பு நிலைக்கு பல மடங்கு வலிமையை சேர்த்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அது போல இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து , ஃபிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய கடற்படைகளிடம் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமக்கும் ஏவுகணைகள் உள்ளன இந்தியாவின் K-5 அல்லது K-6 SLBM Submarine Launched Ballistic Missile அதாவது நீர்மூழ்கிகளால் ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணைகளில் மேற்கண்ட MIRV தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.