30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 11 நீர்மூழ்கி கப்பல்களை களமிறக்கிய இந்திய கடற்படை !!
1 min read

30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 11 நீர்மூழ்கி கப்பல்களை களமிறக்கிய இந்திய கடற்படை !!

இந்திய கடற்படையின் வரலாற்றில் ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகள் நீர்மூழ்கி கப்பல் படைப்பிரிவுக்கு இருண்ட நாட்களாக தான் இருந்தன. விபத்துகள், படைவிலக்கப்படும் நீர்மூழ்கிகள், சரியான பராமரிப்பு இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளவையும் பெரும்பாலும் சரிபார்ப்பு பணிகளிலேயே சிக்கி கிடந்த சூழல் நிலவியது.

இந்த நிலையில் அந்த இருண்ட நாட்களை புறந்தள்ளூம் விதமாக நேற்று இந்திய கடற்படை ஒரே நேரத்தில் சுமார் 11 நீர்மூழ்கி கப்பல்களை கடலில் களமிறக்கி உள்ளதாக அறிவித்தது அதாவது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே இத்தகயை முதல் நிகழ்வாகும், அவை இந்திய பெருங்கடலின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.

குறிப்பாக புத்தம் புதிய INS KALVARI கல்வரி நீர்மூழ்கி கப்பல் முதல்முறையாக அந்தமானில் தெற்கு முனையில் உள்ள கேம்ப்பெல் பே பகுதிக்கு சென்றுள்ளது இங்கிருந்து மலாக்கா ஜலசந்தி 700 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் தான் உள்ளது இந்த வழியாக தான் சீன கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 90களின் ஆரம்பத்தில் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட 8 KILO, 4 Foxtrot ரக நீர்மூழ்கிகளூம் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட 4 HDW ரக நீர்மூழ்கி கப்பல்களூம் என மொத்தத்தில் 12 கப்பல்கள் இருந்தது தான் அதிகமாக இருந்தது ஆனால் தற்போது சுமார் 16 நீர்மூழ்கிகள் உள்ளன.

7 KILO, 4 HDW மற்றும் ஃபிரான்ஸிடம் இருந்து உதவி பெற்று கட்டப்பட்ட 5 SCORPENE ரக நீர்மூழ்கி கப்பல்கள் என மொத்தமாக 16 கப்பல்கள் சேவையில் உள்ளன அவற்றில் 11 கப்பல்கள் இந்தியாவின் இரு பக்கமும் தீவிர ரோந்து பணியில் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளன இது 69% டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் தயார் நிலையை காட்டுகிறது.

ஒரு மூத்த நீர்மூழ்கி கப்பல் படைப்பிரிவு அதிகாரி பேசும்போது தான் பணியில் சேர்ந்து 25 வருடங்கள் ஆவதாகவும் ஆனால் இப்போது தான் முதல்முறையாக இவ்வளவு நீர்மூழ்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு காரணம் காலம்தாழ்த்தப்பட்ட பராமரிப்பு, ஸ்கார்பீன் கலன்களின் கட்டுமானத்தில் தொய்வு, அடிக்கடி பழுதுகள் விபத்துகள் ஏற்படும் சூழல் தான் ஆனால் தற்போது இவை மாற்றம் பெற்று வருவதாக கூறியுள்ளார்.

கடைசி கல்வரி ரக நீர்மூழ்கி கப்பல் இந்த மாதம் படையில் இணைகிறது தவிர கூடுதலாக 3 கல்வரி நீர்மூழ்கி கட்டப்பட உள்ளன, மேலும் Project 75 INDIA திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட்டால் மேலும் 9 நீர்மூழ்கி கப்பல்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் படையில் இணையும் அப்போது டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிக்கும்.

அதே நேரத்தில் தற்போது இரண்டு அணுசக்தியால் இயங்கும் பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் SSBN படையில் உள்ளன, விரைவில் இத்தகைய மூன்றாவது கலன் படையில் இணைய உள்ளது நான்காவது கலன் 2025 வாக்கில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் இதே SSBN ரகத்தை சேர்ந்த ஆனால் இரண்டு மடங்கு பெரிய 3 S5 ரக நீர்மூழ்கி கப்பல்கள் 2027ஆம் ஆண்டு தயாரிப்பு நிலையை அடைய உள்ளதாக கூறப்படுகிறது,தொடர்ந்து SSN எனப்படும் 6 அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் Project 75 ALPHA திட்டத்தின்கீழ் கட்டப்பட உள்ளன, 2030க்கு பிறகு இவை வரிசையாக படையில் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து 2025 வாக்கில் ஒரு அகுலா ரக அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி படையில் இணைவதாக கூறப்படுகிறது எனினும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அது சந்தேகம் தான் இது தவிர முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்து வடிவமைக்கப்பட்ட 12 அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை Project 76 எனும் திட்டத்தின்கீழ் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது இவை 2036 முதல் படையில் இணையும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் அடுத்த 25 வருடங்களில் இந்திய கடற்படையிடம் 9 SCORPENE, 6 P75I, 12 P76 என 24 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகள், 4 S3 மற்றும் S4 , 3 S5 ரக SSBN நீர்மூழ்கிகள், 6 P75A அணுசக்தியால் இயங்கும் 13 நீர்மூழ்கி கப்பல்கள் என ஒட்டுமொத்தமாக 40 நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய கடற்படையிடம் 7 KILO நீர்மூழ்கிகள் தான் உள்ளன முதலில் 10 இருந்தன ஆனால் அவற்றின் வயது கூட கூட அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது, அதே போல் HDW ரக நீர்மூழ்கிகளின் வயதும் அதிகரித்து கொண்டே வருகிறது காரணம் இவையனைத்தும் 80களில் படையில் இணைந்தவை ஆகவே உடனடியாக எதிர்கால தேவைகளை கருதி மேற்குறிப்பிட்ட நீர்மூழ்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.