செங்கடல் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜெர்மனி சார்பில் சாக்சென் வகையை சேர்ந்த F221 என்னும் அடையான எண் கொண்ட FGS HESSEN என்கிற போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த வாரம் ஒரு நாள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் கப்பலின் ரேடார்கள் ஒரு டிரோன் பறந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தன இந்த டிரோன் யாருடையது என்பதை குறிக்கும் எந்த அடையாளங்களும் இல்லை ஆனால் இது அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு MQ-9 REAPER ரீப்பர் டிரோன் ஆகும்.
அதனுடைய IFF – Identification Friend or Foe அதாவது நட்பு நாடுகளின் தளவாடங்களுக்கு தானும் ஒரு நட்பு நாட்டின் தளவாடம் தான் என்பதை உணர்த்தும் சிக்னலை அனுப்பும் கருவி ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது ஆகவே இது ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான டிரோன் என ஜெர்மன் போர்க்கப்பல் குழு கருதியது.
உடனடியாக இரண்டு RIM – 66 SM-2MR இடைத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அந்த டிரோனை நோக்கி போர்க்கப்பல் ஏவியது ஆனால் கப்பலின் ரேடார் அமைப்பில் தீடிரென ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை வெற்றிகரமாக நெருங்குவதற்கு பதிலாக ஏவுகணைகள் வழி தவறின இதனால் அமெரிக்க டிரோனும் தப்பியது.
பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விசாரனைகளில் தான் இந்த டிரோன் அமெரிக்க ராணுவத்தினுடையது எனவும் நட்பு நாடுகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தது என்பதும் தெரிய வந்தது.
இந்த டிரோன் தாக்கப்பட்டு இருந்தால் கடந்த நவம்பர் முதலான காலகட்டத்தில் அமெரிக்கா இழக்கும் மூன்றாவது MQ-9 டிரோனாக மாறி இருக்கும், ஹூத்திக்கள் ஏற்கனவே இத்தகைய இரண்டு டிரோன்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.