ஹாலிவுட் பாணியில் கடற்கொள்ளையர்களை அலற விட்ட இந்திய கடற்படை மார்க்கோஸ் !!

நேற்றைக்கு முன்தினம் சோமாலிய கடற்பரப்பிற்கு அருகே நடைபெற்ற ஆபரேஷன் ஒன்றில் இந்திய கடற்படை ஒரு கப்பலை மீட்டதோடு மட்டுமின்றி சுமார் 35 கடற்கொள்ளையர்களை கைது செய்துள்ளது, இதில் மார்க்கோஸ் சிறப்பு படையினர் மேற்கொண்ட ஹாலிவுட் பாணி அதிரடி நடவடிக்கை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது மால்டா நாட்டு கொடி கொண்ட அதாவது அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28,000 டன்கள் எடை கொண்ட MV RUEN ரூவென் எனும் சரக்கு கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது அதிலிருந்த பல்கேரியா அங்கோலா மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த 17 பேர் கொண்ட கப்பல் குழுவினரும் பணயக்கைதிளாக பிடித்து வைக்கப்பட்டனர்.

இந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் பிற கப்பல்களை சிறைபிடிக்க பயன்படுத்தியதாக கூறப்படுகிறது அதாவது பணயக்கைதிளாக உள்ள குழுவினரை மிரட்டி கப்பலை இயக்க சொல்லி சாதாரண கப்பல் போன்று தோற்றமளிக்க செய்து மற்ற கப்பல்களை பிடிப்பது தான் நோக்கம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் இந்த வாரம் துவக்கத்தில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட வங்கதேச பதிவு கொண்ட சரக்கு கப்பலை இந்த MV RUEN கப்பலை பயன்படுத்தி சிறைபிடித்து இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய கடற்படையின் INS KOLKATA கொல்கத்தா நாசகாரி போர் கப்பலில் கண்காணிப்பில் மேற்குறிப்பிட்ட கப்பல் சிக்க உடனடியாக சேத்தக் ரக ஹெலிகாப்டரை அனுப்பி கண்காணிப்பை துவங்கியது அப்போது கப்பல் அருகே ஹெலிகாப்டர் சென்றதும் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து இந்திய கடற்படை கடற்கொள்ளையர்களை சரணடையவும் குழுவினரை விடுவிக்கவும் சொல்லி தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்தது ஆனால் கடற்கொள்ளையர்கள் அதற்கு செவி கொடுக்கவில்லை இதை தொடர்ந்து இந்திய கடற்படை தனது மீட்பு நடவடிக்கைகளை துவங்கியது.

முதல் கட்டமாக INS SHUBADHRA ஷூபத்ரா எனும் ரோந்து கலன், அமெரிக்க தயாரிப்பு அதிநவீன MQ-9B Predator ஆளில்லா விமானம், ஆகியவை சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டன அவை கொல்கத்தா நாசகாரி கப்பலுடன் இணைந்து கண்காணிப்பு மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

தொடர்ந்து இந்திய விமானப்படையின் பிரமாண்டமான அமெரிக்க தயாரிப்பு C-17 Globemaster ரக விமானம் மூலமாக ஒரு “பிரஹார்” அதாவது ஒரு Section 8 பேர் கொண்ட மார்க்கோஸ் குழுவினர் தங்களது ஆயுதங்களுடன் MV RUEN கப்பல் அருகே பாராசூட் மூலமாக கடலில் குதித்தனர்.

அடுத்த உடனடியாக கப்பலில் ஏறி பணயக்கைதிளை விடுவித்து படகுகள் மூலமாக பத்திரமாக மீட்டனர், தொடர்ந்து 35 கடற்கொள்ளையர்களும் சரண் அடைந்தனர் இந்த 40 மணி நேர நடவடிக்கை உலக கடற்படைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2017ஆம் ஆண்டுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட ஒரு சரக்கு கப்பல் மீண்டும் மீட்கப்படுவது இதுவே முதல் முறையாகும் இந்திய கடலோர பகுதியில் இருந்து சுமார் 2600 கிலோமீட்டர் தொலைவு மற்றும் சோமாலிய கடற்கரையில் இருந்து 481 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேற்குறிப்பிட்ட சரக்கு கப்பலில் 1 மில்லியன் அமெரிக்க மதிப்புள்ள இரும்பு இருப்பதாகவும் ஆயுதங்கள் ஏதுவும் இல்லை எனவும் சோதனைக்கு பிறகு தெரிய வந்துள்ளது தற்போது கப்பலும் கடற்கொள்ளையர்களும் இந்தியா கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.