ஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஷ்கோல்ஸ் திங்கட்கிழமை அன்று “ஜெர்மனி தனது டாரஸ் தொலைதூர க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிக்காது எனவும் அப்படி செய்தால் அவற்றை ஏவ ஜெர்மன் படையினர் உக்ரைனுக்கு சென்று உக்ரைன் படைகளுக்கு களத்தில் உதவ வேண்டிய சூழல் வரும் என கூறியுள்ளார்.
அதாவது உக்ரைனுக்கு பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்சு கூட்டு தயாரிப்பான STORM SHADOW ஏவுகணைகளை பிரிட்டனும் ஃபிரான்சும் வழங்கி உள்ளன ஆனால் இவற்றை பயன்படுத்தி உக்ரைன் படைகளுக்கு பழக்கமில்லாத காரணத்தால் ஃபிரெஞ்சு படைகள் குறிப்பாக பிரிட்டிஷ் படையினர் மற்றும் உளவுத்துறையினர் உக்ரைன் சென்று இவற்றை இலக்குகளை கண்டறிந்து தாக்க உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியின் கூட்டு தயாரிப்பான TAURUS KEPD 350 ரக க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க ஜெர்மனி முன்வர வேண்டும் என மேற்குலக நாடுகள் குறிப்பாக பிரிட்டன் வலியுறுத்தி அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது, இதை தொடர்ந்து தான் ஜெர்மன் அதிபர் அப்படி செய்தால் போரில் பங்கெடுப்பது போன்று ஆகிவிடும் ஆகவே முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் காரணம் இத்தகைய ரகசிய செயல்பாடுகளை அவர் பகிரங்கமாக பொது வெளியில் பகிர்ந்துள்ளதன் காரணமாக உக்ரைனில் உள்ள பிரிட்டன் படையினர் உளவுத்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் இங்கிலாந்து மண்ணில் ரஷ்ய உளவு நடவடிக்கைகள் அதிகரிக்கும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜெர்மனியின் அரசியல் வட்டாரங்களிலும் இருந்து அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன, இதற்கிடையே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் ஜெர்மன் அதிபரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது அதாவது ஒரு சிறிய பிரிட்டன் ராணுவ மருத்துவ குழு மட்டுமே உக்ரைனில் உள்ளதாகவும் அவர்கள் மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் அளித்து வருவதாகவும் போர் நடவடிக்கைகள் உக்ரைன் படைகளின் பணி எங்களுக்கு அதில் தொடர்பில்லை எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.