C-295M போக்குவரத்து விமானத்தை வாங்க விரும்பும் எல்லை பாதுகாப்பு படை !!

  • Tamil Defense
  • March 13, 2024
  • Comments Off on C-295M போக்குவரத்து விமானத்தை வாங்க விரும்பும் எல்லை பாதுகாப்பு படை !!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான இந்தியாவின் எல்லையோர பகுதிகளை பாதுகாக்கும் BSF – Border Security Force எனப்படும் எல்லை பாதுகாப்பு படை தற்போது இரண்டு EADS CASA C-295M போக்குவரத்து விமானங்களை வாங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லை பாதுகாப்பு படை தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் ஆங்காங்கே பல ஆயிரம் மைல்கள் தொலைவுகள் உள்ள இடங்களுக்கு படைகளை நகர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் தற்போது எல்லை பாதுகாப்பு படையிடம் அதற்கான வசதிகள் இல்லை.

பொதுவாகவே எல்லை பாதுகாப்பு படை ஆனாலும் சரி அல்லது பிற மத்திய ஆயுத காவல் படைகள் அதாவது துணை ராணுவ படைகள் ஆனாலும் சரி இந்திய விமானப்படையை தான் போக்குவரத்திற்கு சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதில் எல்லை பாதுகாப்பு படை மட்டும் சற்றே விதிவிலக்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் என 20 வகையான வானூர்திகளை இயக்கி வருகிறது ஆனால் இவற்றை கொண்டும் அல்லது விமானப்படையின் உதவியோடு போதுமான அளவில் உடனடி படை நகர்வுகளை மேற்கொள்ள முடியாது பெரும்பாலும் ரயில்களை தான் இதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த பிரச்சினையை சற்றே சரி செய்யும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மேற்கண்ட கோரிக்கையை எல்லை பாதுகாப்பு படை சமர்பித்து ஒப்புதல் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஏற்கனவே இந்திய விமானப்படை இத்தகைய 65 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதும், இந்திய கடலோர காவல்படையும் இவற்றை கடல்சார் கண்காணிப்புக்கு தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.