ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான் ஃபிரான்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகள் சார்ந்த பாதுகாப்பு கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஐரோப்பிய பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் அதனை உறுதி செய்வது ஐரோப்பிய நாடுகளின் கடமை எனவும் கூறினார்.
மேலும் உக்ரைனில் நடப்பது சரியல்ல, நேட்டோ நாடுகளின் படைகள் தேவைப்படும் பட்சத்தில் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ரஷ்ய படைகளுடன் மோதும் என்றார்.
இது உலக அரங்கில் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் நேட்டோ வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் அனுப்பி வைக்கப்பட்டால் மூன்றாவது உலக மகா யுத்தம் ஏற்படும் எனவும்,
ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுத சக்தி எங்கள் அணு ஆயுத ஏவுகணைகள் நேட்டோ ஆயுதங்களை விடவும் சக்தி வாய்ந்தவை ஆகும், ரஷ்ய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டால் அடுத்த நிமிடமே தயக்கமின்றி அவற்றை பயன்படுத்த உத்தரவிடுவேன் என கூறியுள்ளார்.
ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கூறுகையில் ஃபிரெஞ்சு அதிபர் நிதானத்தோடு சிந்தித்து பேச வேண்டும். அவரது யோசனை ஐரோப்பாவுக்கு சமாதானத்தை அல்ல பெரும் அழிவை தான் கொண்டு வரும் என்றார்.
இதை தொடர்ந்து நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், கீரிஸ் பிரதமர் மற்றும் அமெரிக்க இங்கிலாந்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் அனுப்பி வைக்கப்படும் பேச்சுக்கே இடமில்லை என மறுப்பு தெரிவித்தனர்.
சில நாட்கள் முன்னர் முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் ரஷ்யாவிற்கு ஆபத்து ஏற்படுத்த நினைத்தால் எங்களின் 6000 அணு ஆயுதங்கள் வாஷிங்டன் லண்டன் பெர்லின் உள்ளிட்ட நகரங்களை நோக்கி பாயும் எனவும்
சோவியத் ஒன்றிய காலகட்டத்திலேயே மேற்கத்திய நாடுகளின் அழகான நகரங்கள் எங்கள் அணு ஆயுத தாக்குதல் அமைப்பில் இலக்குகளாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன
எங்களது அழகான 1000 ஆண்டு கால தாயகமான ரஷ்யாவை அழிக்க நினைத்தால் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் துளியும் தயக்கமின்றி அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் அது உலகளாவிய அணு ஆயுத போருக்கு வித்திடும் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.