விண்வெளிக்கு செல்ல தயாராகும் வீரர்களின் விவரங்கள் !!
1 min read

விண்வெளிக்கு செல்ல தயாராகும் வீரர்களின் விவரங்கள் !!

இந்திய விமானப்படையில் இருந்து 4 அதிகாரிகள் இந்தியாவின் லட்சிய திட்டமான மனிதர்களை அதாவது இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர், அவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

மிஷன் கமாண்டர் அதாவது இந்த ககன்யான் திட்டத்தின் கட்டளை அதிகாரியாக க்ரூப் கேப்டன் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தேர்வாகி உள்ளார், இவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா பஞ்சாயத்திற்குட்பட்ட திருவழியாடு கிராமத்தை சேர்ந்தவர். 47 வயதாகும் இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து பின்னர் விமானப்படை அகாடமியில் இணைந்து வீரவாள் பெற்று சிறப்பாக பயிற்சி நிறைவு செய்து 19 டிசம்பர் 1998ஆம் ஆண்டு விமானப்படையில் அதிகாரியாக இணைந்தார்.

அன்று முதல் தற்போது வரை சுமார் 3000 மணி நேரம் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29, ஹாக் விமானம், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் மேலும் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகள் ஊழியர் கல்லூரி மற்றும் சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையின் விமானிகள் பயிற்சியாளர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று அங்கேயே பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார்,

இவர் Category A அதாவது முதல் தர விமானிகள் பயிற்சியாளர் ஆவார். மேலும் இவர் இந்திய விமானப்படையின் ஒரு முன்னனி சுகோய்-30 MKI படையணியை வழிநடத்திய அனுபவம் வாய்ந்தவர் ஆவார், இவரை தான் ககன்யான் திட்டத்தின் விண்வெளி வீரர்கள் குழுவை தலைமை தாங்கவும் வழிநடத்தவும் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அடுத்ததாக க்ரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் சென்னையில் கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல்19 ஆம் தேதி பிறந்தார், பள்ளி கல்வியை முடித்த அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு சேர்ந்து பயிற்சி பெற்று குடியரசு தலைவரின் தங்க பதக்கம் பெற்று பின்னர் விமானப்படை அகாடமியில் வீரவாள் பெற்று பயிற்சி நிறைவு செய்து இந்திய விமானப்படையில் அதிகாரியாக 21 ஜூன் 2003ஆம் ஆண்டு இணைந்தார் அன்று முதல் தற்போது வரை இவர் சுமார் 2900 மணி நேரம் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29, SEPECAT ஜாகுவார், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

இவரும் இளம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் விமானி பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் மேலும் இவர் ஊட்டி வெலிங்டனில் உள்ள DSSC எனப்படும் பாதுகாப்பு படைகள் ஊழியர்கள் கல்லூரி சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையின் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான கல்லூரியில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

அடுத்ததாக க்ரூப் கேப்டன் அங்கத் பிரதாப், இவர் 1982ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் அன்று அலகாபாத் எனப்பட்ட இன்றைய பிரயாக்ராஜ் நகரில் பிறந்தார், பள்ளி கல்விக்கு பிறகு தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்த அவர் அங்கு பயிற்சி நிறைவு செய்து விமானப்படை அகாடமியிலும் பயிற்சி நிறைவு செய்து 2004 டிசம்பர் மாதம் இந்திய விமானப்படையில் இணைந்தார்.

அன்று முதல் தற்போது வரை சுமார் 2000 மணி நேரங்கள் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29,SEPECAT ஜாகுவார், ஹாக், டோர்னியர், An-32 உள்ளிட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் நிறைந்தவர் ஆவார், இவரும் இளம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கு விமானி பயிற்சியாளர் ஆவார்.

கடைசியாக விங் கமாண்டர் சுபான்ஷூ ஷூக்லா இவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று பிறந்தார், பள்ளி கல்விக்கு பிறகு தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து பயிற்சி நிறைவு செய்து பின்னர் விமானப்படை அகாடமியிலும் பயிற்சி நிறைவு செய்து விமானப்படையில் 2006ஆம் ஆண்டு அதிகாரியாக இணைந்தார்.

அன்று முதல் தற்போது வரை சுமார் 2000 மணி நேரங்கள் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29, SEPECAT ஜாகுவார், ஹாக், டோர்னியர், An-32 உள்ளிட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் மிக்கவர் ஆவார்.

மேலும் இவர்கள் நாலு பேருமே இந்திய விமானப்படையின் INDIAN AIR FORCE TEST PILOTS SCHOOL எனப்படும் விமானப்படை சோதனை விமானிகள் கல்லூரியில் பயிற்சி பெற்ற சோதனை விமானிகள் ஆவர் இவர்கள் தான் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வானூர்திகளை இயக்கி தரத்தை உறுதி செய்வோர் ஆவர் இத்தகையோரை மட்டுமே இத்திட்டத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது.

பின்னர் அத்தகைய மூத்த சோதனை விமானிகளை Aeromedical அதாவது விண்வெளி சார்ந்த மருத்துவ சோதனைகள், Clinical Test அடிப்படை மருத்துவ சோதனைகள் மற்றும் Psychological tests மனநிலை சோதனைகள் ஆகியவற்றின் மூலமாக இந்த நால்வரை தேர்வு செய்து ரஷ்யா மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் பெற அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பயிற்சி நிறைவு செய்த அவர்கள் தற்போது இந்தியாவில் பெங்களூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் அதிநவீன பயிற்சிகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் பெற்று வருகின்றனர், 2025ஆம் ஆண்டு இவர்களில் மூவர் மட்டுமே விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவர் ஒருவர் மட்டும் அந்த மூவரில் ஒருவர் செல்ல முடியாத நிலை ஏற்படும் போது அவருக்கு மாற்றாக அனுப்பி வைக்கப்படும் உறுப்பினர் ஆக இருப்பார்.