
தமிழகத்தின் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்திலிருந்து MQ-9B ஆளில்லா விமானம் 13000 மணி நேரம் பறந்து இந்திய பெருங்கடல் பகுதியில் இதுவரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவசரமாக இரண்டு ஆளில்லா விமானங்களை இந்திய கடற்படை குத்தகைக்கு எடுத்தது.அன்று முதல் இரு விமானங்களும் தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஒரே நேரத்தில் 4000 முதல் 8000 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டவை இந்த ஆளில்லா விமானங்கள். 30 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை இந்த விமானங்கள். எனவே ஒரே முறையில் பறந்து மொத்த இந்திய பெருங்கடல் பகுதியையும் கண்காணிக்கும் திறன் கொண்டவை இந்த விமானங்கள் ஆகும்.
தற்போது ஆயுதங்கள் பொருத்தப்படாமல் கண்காணிப்பு பணிகளுக்காக மட்டும் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இந்திய கடற்படைக்காக 10 முதல் 15 ஆளில்லா விமானங்கள் பெறப்பட உள்ளன. இந்த விமானங்கள் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு வரும். அதாவது வான்- தரை தாக்கும் ஏவுகணைகள், வெடிகுண்டுகள், நீர் மூழ்கிகளை கண்டறியும் அமைப்பு பொருத்தப்பட்ட sonobuoy ஆகியவை இணைத்து பெறப்பட உள்ளது.
மேலும் இந்த விமானத்தில் அமெரிக்காவின் Hell fire ஏவுகணைகளை இணைத்து உபயோகிக்க முடியும். இந்த ஏவுகணை மூலம் தொலைதூர இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்க முடியும். இந்த ட்ரோனை உபயோகித்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை இதுவரை வெற்றிகரமாக நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய படைகளுக்காக 31 ஆளில்லா விமானங்களை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து பெற உள்ளது.அதற்கான செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 31 ஆளில்லா விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றில் 15 விமானங்கள் கடற்படைக்கும் எட்டு விமானங்கள் ராணுவத்திற்கும் எட்டு விமானங்கள் விமானப் படைக்கும் வழங்கப்பட உள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதிகள் மட்டுமல்லாமல் லடாக் போன்ற உயர்ந்த மலைப் பகுதிகளை கொண்ட பகுதிகளிலும் இந்த ட்ரோன்கள் உதவியுடன் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளில் ஈடுபட முடியும்.
இந்த ட்ரோன்களை இயக்குவதற்காக வீரர்களுக்கு பயிற்சி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.