ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை பெறும் உலகின் அதிநவீன நாசகாரி போர் கப்பல் !!

  • Tamil Defense
  • August 28, 2023
  • Comments Off on ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை பெறும் உலகின் அதிநவீன நாசகாரி போர் கப்பல் !!

உலகிலேயே மிகப்பெரிய மற்றும் உலகிலேயே அதிக ஸ்டெல்த் திறன் கொண்ட உலகின் அதிநவீன ஸம்வால்ட் ரக நாசகாரி போர் கப்பல்கள் அமெரிக்க கடற்படையில் தான் உள்ளன.

தற்போது இத்தகைய 3 மூன்று கப்பல்களை கட்டியுள்ள நிலையில் தற்போது ஒன்று மட்டுமே சேவையில் உள்ளது, மற்றொன்று சிறப்பு பணியில் உள்ளது மேலும் ஒன்று கடல் சோதனையில் உள்ளதாக தெரிகிறது.

இந்த வகை கப்பல்களில் தான் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை இணைக்க உள்ளது, அந்த வகையில் இந்த கப்பல்களில் முதலாவதான USS ஸம்வால்ட் ரக கப்பல் தற்போது இந்த பணிகளுக்காக அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள பாஸ்ககுலா நகரத்தில் அமைந்துள்ள இங்கால்ஸ் கப்பல் கட்டுமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த கப்பல் கட்டுமான தளத்தை சென்றடைந்துள்ள நிலையில் இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை இணைப்பு பணிகள் வருகிற 2025 ஆம் ஆண்டு நிறைவடையும், அதாவது 2 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. இதற்காக கப்பலின் கட்டமைப்பில் ஒரு மிக முக்கியமான மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்த கப்பல்களில் உள்ள இரண்டு AGS – Advanced Gun System எனப்படும் அதிநவீன பிரங்கி அமைப்பு தான் மாற்றியமைக்கப்பட உள்ளது, இவற்றில் LRLAP – Long Range Land Attack Projectile எனப்படும் அதிநவீன தொலைதூர நில தாக்குதல் குண்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இவற்றின் விலையோ மிக அதிகம் அதாவது ஒரு குண்டோட விலை 8.25 கோடி வரும், இதனால் இவற்றை தயாரிக்கவில்லை.

தற்போது அந்த AGS பிரங்கிகளை மாற்றிவிட்டு அந்த இடத்தில் நான்கு 87 இன்ச் ஏவுகணை குழாய்களை நிறுவுவாங்க, ஒரு ஏவுகணை குழாயில் 3 ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் இருக்கும் அப்படி நான்கு குழாய்களையும் சேர்த்து 12 ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் ஒரு ஸம்வால்ட் கப்பலில் இருக்கும்.

இதில் இருந்து ஏவப்படும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் அமெரிக்க தரைப்படை மற்றும் அமெரிக்க கடற்படையால் இணைந்த LRHW – Long Range Hypersonic Weapon அதாவது தொலைதூர தாக்குதல் ஹைப்பர்சானிக் ஆயுத திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் கூட

தற்போதைக்கு நடுத்தர தொலைவு அதாவது 2875 கிலோமீட்டர் மட்டுமே செல்லக்கூடியாக தயாரிக்கப்பட்டுள்ளது ஆனால் எதிர்காலத்தில் இந்த தாக்குதல் தொலைவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, அதே நேரத்தில் இதன் வேகம் அபரிமிதமானது மாக் 17 அதாவது ஏறத்தாழ மணிக்கு 21 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும்.

இந்த ஏவுகணையில் இரண்டு பாகங்கள் உள்ளன முதலில் ஒரு பெரிய பூஸ்டர் இதனை பிரசித்தி பெற்ற லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும், இரண்டாவது பாகம் ஏவுகணையின் மூக்கு பகுதியில் இருக்கும் Glide Vehicle எனப்படும் மிதவை வாகனம் ஆகும் இதை லெய்டோஸ் குழுமத்தின் ஒரு பிரிவான டைனெட்டிக்ஸ் தயாரிக்கும்.

இந்த பூஸ்டர் தேவையான உயரத்திற்கு மிக அதிக வேகத்தில் ஏவுகணையை கொண்டு சென்று பின்னர் மதிவை வாகனத்தை விடுவிக்கும் ஏற்கனவே பூஸ்டரின் வேகத்தால் கிடைத்த விசை காரணமாக அது இலக்கை நோக்கி ஹைப்பர்சானிக் வேகத்தில் பாய்ந்து சென்று தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தரைப்படை ஏற்கனவே இதற்கு டார்க் ஈகிள் என பெயரிட்டு தனது பிரங்கிபடை பிரிவின் 3ஆவது Field Artillery Regiment இன் 5ஆவது பட்டாலியனில் இணைத்து பயன்பாட்டை துவங்கி உள்ளது, ஆனால் அமெரிக்க கடற்படை இதற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

எது எப்படியோ இந்த நகர்வு இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவால் அமெரிக்கா மற்றும் தைவான் போன்ற அதன் நட்பு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள என்று சொன்னாலும் மிகையாகாது.

விரைவில் மீண்டும் மற்றொரு சுவாரஸ்யமான செய்தியுடன் சந்திக்கிறேன் நன்றி வணக்கம். ஜெய்ஹிந்த்.