
இந்தியாவின் அரசு பொதுத்துறை நிறுவனமான HAL ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் HTT-40 எனும் ஒற்றை என்ஜின் சுதேசி பயிற்சி போர் விமானத்தை உருவாக்கியுள்ளது.
முதல்கட்டமாக இந்திய விமானப்படை இத்தகைய 70 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியுள்ளது வருங்காலத்தில் மேலும் கூடுதலாக 36 விமானங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் இவற்றின் டெலிவரி துவங்கும் என கூறப்படும் நிலையில் இந்த விமானம் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அதையொட்டி கஸ்டமர்களின் விருப்பத்திற்கேற்ப தேவைப்பட்டால் ஆயுதங்களை சுமக்கும் விதமாகவும் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள சுவிட்சர்லாந்து தயாரிப்பான Pilatus PC-7 Mark 2 அடிப்படை பயிற்சி விமானங்களுக்கு மாற்றாக இவை அமையும் மேலும் அவற்றை விட 30% மலிவானது எனவும் அனைத்து திறன்களிலும் Pilatus விமானத்தை விட சிறந்த செயல்பாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இதன் மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆகவே இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி இவற்றை பயிற்சி விமானங்களாகவும் அதே நேரத்தில் சிறிய ஏழை நாடுகளுக்கு இலகுரக போர் விமானமாகவும் ஏற்றுமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.