இந்திய கடற்படையின் நீர்மூழ்கி படைக்கு அடித்தளமிட்ட ஒய்வு பெற்ற தமிழக அதிகாரி மரணம் !!
1 min read

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி படைக்கு அடித்தளமிட்ட ஒய்வு பெற்ற தமிழக அதிகாரி மரணம் !!

கடந்த 1967ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அங்கமான இன்றைக்கு சுதந்திர நாடாக உள்ள லாத்வியாவின் தலைநகர் ரிகாவில் INS KALVARI கல்வரி என்ற Foxtrot ரக நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

அன்று அதற்கான ஆணையை வாசித்து இணைப்பை உறுதி செய்த அதிகாரி தமது தமிழகத்தின் சென்னை நகரை சேர்ந்த அன்றைக்கு கமாண்டராக இருந்த கமோடர் கே எஸ் சுப்பிரமணியன் ஆவார் 94 வயதான இவர் கடந்த 5 ஆம் தேதி மரணமடைந்த நிலையில் 9ஆம் தேதி முழு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது.

செப்டம்பர் 1, 1951ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்த அவரை 1962ஆம் ஆண்டு இங்கிலாந்து கடற்படையின் நீர்மூழ்கி படைப்பிரிவின் பயிற்சி மையமான HMS DOLPHIN டால்ஃபின் தளத்திற்கு நீர்மூழ்கி பயிற்சி பெற இந்திய கடற்படை அனுப்பி வைத்தது.

அதன் பிறகு 3 மாத ரஷ்ய மொழி பயிற்சி பெற்ற தனது குழுவுடன் சோவியத் ஒன்றியத்திற்கு சென்று அங்கு மைனஸ் 35 டிகிரி குளிரில் 18 மாதங்கள் நீர்மூழ்கி நடவடிக்கை சார்ந்த பயிற்சி பெற சென்றார்.

1967 டிசம்பர் 8 அன்று இந்திய கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பல் இவர் தலைமையில் படையில் இணைக்கப்பட்டது அந்த நாள் தான் இன்றும் நீர்மூழ்கி கப்பல் படை தினமாக இந்திய கடற்படையால் கொண்டாடபட்டு வருகிறது.

பின்னர் தனது குழுவில் இருந்த சென்னையை சேர்ந்த மூன்று அதிகாரிகளுடன் கப்பலை இந்தியா கொண்டு வரும் பொறுப்பை ஏற்றார் அமெரிக்க கடற்படையின் பின்தொடர்தல் என பல்வேறு இடர்பாடுகளை தாண்டி விசாகப்பட்டினம் கொண்டு வந்து சேர்த்தார்.

கமோடர் கே எஸ் சுப்பிரமணியன் அந்த கப்பலின் முதல் கட்டளை அதிகாரியானார், அவருடன் அவருக்கு கீழ் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பின்னாளில் அந்த கப்பலின் கட்டளை அதிகாரி ஆனார்கள் அதாவது அந்த கப்பலின் 10 கட்டளை அதிகாரிகளில் (CO – Commanding Officer) 4 பேர் சென்னையை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவர்.

பின்னர் அவரது தலைமையில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் படையணி பன்மடங்கு வலுவடைந்தது மேலும் பல வியூகங்கள் யுத்த தந்திரங்கள் வகுக்கப்பட்டன இன்று இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வேறு எந்த நாட்டின் நீர்மூழ்கிகளாலும் இந்திய நீர்மூழ்கிகளை போல இயங்க முடியாது.

அதற்கான உறுதியான அடித்தளமிட்டு கொடுத்தவர் கமோடர் சுப்பிரமணியன் என்றால் மிகையல்ல, இவர் கடற்படையின் தந்திரோபாய பள்ளியின் இயக்குனர், இந்திய கடற்படையின் முதல் நீர்மூழ்கி படைத்தளமான INS VIRBAHUவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பு வகித்தார் அவரது காலத்தில் தான் இது ஒரு முழுமையான நீர்மூழ்கி படை தளமாக மாறியது.

மேலும் இவரது மேற்பார்வையின் கீழ் Escape Training School அதாவது நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து தப்பிக்க பயிற்சி அளிக்கும் கல்லூரி அமைக்கப்பட்டது பின்னர் INS AMBA அம்பா எனும் நீர்மூழ்கி கப்பல்களுக்கான உதவி கப்பலின் கட்டளை அதிகாரி, இந்திய கடற்படையின் தெற்கு கட்டளையக தளபதி போன்ற பதவிகளை வகித்து ஜூலை 1, 1978ஆம் ஆண்டு ஒய்வு பெற்று அதன் பிறகு கோயம்புத்தூர் நகரில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.

கடந்தாண்டு அவரது மனைவி இறந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி அவரும் இயற்கை எய்தினார், அவரது இறுதி சடங்கு கோயம்புத்தூர் பி என் பாளையத்தில் நடைபெற்றது கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள இந்திய கடற்படை தளமான INS AGRANI அக்ரானியின் வீரர்கள் அதிகாரிகள் மற்றும் ஒய்வு பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர்.