சென்னையில் போர் விமானத்தை திருடிய இந்திய கடற்படை வீரரின் கதை !!

  • Tamil Defense
  • June 3, 2023
  • Comments Off on சென்னையில் போர் விமானத்தை திருடிய இந்திய கடற்படை வீரரின் கதை !!

இந்திய கடற்படையில் Leading Aircraft Ordnance Mechanic அதாவது போர் விமானங்களில் ஆயுதங்களை பொருத்தும் பணியை செய்து வந்தவர் அஜீத் சிங் கில் ஆவார், இவருக்கு போர் விமானியாக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது ஆனால் அதிகாரிகள் மட்டுமே போர் விமானங்களை ஓட்ட முடியும் என்பதால் அவரது கனவு நிறைவேறவில்லை.

ஆனால் அவர் தில்லியில் உள்ள தனியார் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஒற்றை என்ஜின் விமானத்தை இயக்கி விமானி உரிமம் பெற்றிருந்தார் மேலும் சிறிய விமான மாடல்களை உருவாக்கி வந்தார் நிலைமை இப்படியிருக்க அவர் இந்திய கடற்படையில் மாலுமியாக இணைந்து பின்னர் Naval Aircraft Ordnance Mechanic ஆக பதவி உயர்வு பெற்றார்.

மேலும் அவர் இந்திய கடற்படையின் white Tigers என அழைக்கப்படும் Indian Naval Aviation Squadron INAS 300 எனப்படும் இந்திய கடற்படையின் போர் விமான படையணியில் பணியாற்றி வந்தார், ஆனாலும் தொடர்ந்து இந்திய விமானப்படையில் அதிகாரியாக இணைய இரண்டு முறை முயன்று தோல்வியை தழுவினார்.

இந்த தோல்வியை தொடர்ந்து சிறிது நாட்களில் அவரது தனியார் விமானி உரிமமும் காலாவதி ஆனது ஆகையால் மனமுடைந்த அவர் விரக்தியின் உச்சத்திற்கு சென்றார், 1964 ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் நிறுத்தப்படிருந்த INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலின் ஒடுபாதையில் நின்று கொண்டு இருந்த IN – 163 என்ற வரிசை எண் கொண்ட Sea Hawk போர் விமானத்தில் ஏறி விமானிக்கான தலைக்கவசம் இல்லாமல் விமானத்தை இயக்கி வானில் எழுப்பி பறக்க தொடங்கினார் விமானத்தின் கட்டுபாட்டு அமைப்புகள் குறித்து நீண்ட நாட்களாக ஆர்வம் மிகுதியால் விமானிகளிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்ட விஷயங்கள் அவருக்கு உதவியது.

போர் விமானம் வானில் பறக்க துவங்கியதும் கட்டுபாட்டு மைய அதிகாரி அதிர்ச்சி அடைந்தார் காரணம் விமானம் அஜீத் சிங்கால் இயக்கப்படுவது தெரிந்து போனது தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன காரணம் தகவல் தொடர்பு அமைப்பை உள்ளடக்கிய விமானிகளுக்கான தலைக்கவசத்தை அவர் அணிந்திருக்கவில்லை என்பதாகும்.

தன்னிடம் உள்ள அறிவை கொண்டு முடிந்த அளவுக்கு பறந்து தனது வேட்கையை தீர்த்து கொண்ட அஜித் சிங்கால் விமானத்தை தரையிறக்க தெரியவில்லை காரணம் அவருக்கு பிரேக் போன்ற அமைப்புகளை எப்படி இயக்குவது என்பது பற்றிய அறிவில்லாமல் இருந்தது ஆகவே விமானத்தை சென்னை திருவான்மியூர் கடலோரத்தில் நீரில் இறக்கினார் பின்னர் சுயநினைவு இன்றி திருவான்மியூர் மீனவர்களால் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு இந்திய கடற்படை சட்டத்தின் 74ஆவது பிரிவின் கீழ் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது தண்டனை காலம் முடிந்ததும் வெளியே வந்த அவர் மாயமானார் அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்னவானார் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை, அஜித் சிங் கில் பற்றி முன்னாள் மூத்த கடற்படை விமானி வைஸ் அட்மிரல் வினோத் பஸ்ரிச்சா கூறும்போது அஜித் ஒரு சிறந்த விமானி ஆகி இருக்கலாம் அவருக்கு அதற்கு தேவையான தைரியம், லட்சிய வெறி, திறன், ஆர்வம் மற்றும் சிறிதளவு முட்டாள்தனம் போன்றவை இருந்தது என குறிப்பிட்டார்.