நீர்மூழ்கியிலிருந்து கடலில் விழுந்து தப்பி பிழைத்த கடற்படை வீரரின் கதை !!

  • Tamil Defense
  • June 12, 2023
  • Comments Off on நீர்மூழ்கியிலிருந்து கடலில் விழுந்து தப்பி பிழைத்த கடற்படை வீரரின் கதை !!

கடந்த 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு நாள் மாலை நேரம் மழைக்கிடையே மும்பை கடற்படை தளத்தில் இருந்து INS SHISHUMAR எனும் ஜெர்மானிய HDW நிறுவன தயாரிப்ப Type 209 ரக டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் பயணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீடிர் உத்தரவில் ஒரு முக்கியமான நடவடிக்கைக்காக உடனடியாக எந்த வித தாமதமும் இன்றி புறப்படுமாறு கூறப்பட்டு இருந்தது உடனடியாக கப்பலுக்குள் இருந்த குழுவினரால் கப்பலின் இதர குழுவினருக்கு உடனடியாக புறப்பட தயாராகுமாறு General Recall அறிவிக்கை பகிரப்பட்டது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் நீர்மூழ்கி கப்பல் புறப்பட தயாரானது.

ஒரு கப்பல் குறிப்பாக நீர்மூழ்கி கப்பல் தளத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் போது கப்பலின் மேல்பரப்பு அல்லது முன்பகுதியில் நின்றுகொண்டு கப்பல் எங்கும் மோதாமல் செல்ல வழிகாட்டுவர் மேலும் இவர்கள் நங்கூரமிடுதல், துறைமுகத்திற்குள் கப்பல் நகர்வது, மற்றொரு கப்பலுக்கு மிக அருகில் செல்வது போன்ற பணிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டவும் செய்வர்.

மேற்குறிப்பிட்ட பணிகளை செய்ய ஒரு கப்பலின் ஒட்டுமொத்த குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பயிற்சி அளிக்கப்படும் மற்றவர்களால் அந்த பணிகளை செய்ய முடியாது இந்த பணிகளை தவிர கப்பலில் தங்களது வழக்கமான பணிகளையும் அவர்கள் செய்ய வேண்டும் ஆகவே இவர்களை Special Sea Duty Men அதாவது சிறப்பு கடல் பணி குழுவினர் என அழைப்பர்.

அந்த வகையில் ஷிஷூமார் நீர்மூழ்கி கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சானல் வழியாக கடல் பகுதியை நோக்கி செல்ல வழிகாட்ட 15 சிறப்பு பணி வீரர்கள் கப்பலின் மேல்பகுதியில் கடுமையான மழை மற்றும் கொந்தளிப்புக்கு இடையே வழிகாட்டி கொண்டிருந்தனர், நீர்மூழ்கி கப்பலுக்கு மேல் இப்படி பணியாற்றுவது மிகவும் ஆபத்தானதாகும் காரணம் வழக்கமான கப்பல்களில் பிடித்து கொள்ள ஏதேனும் இருக்கும். ஆனால் நீர்மூழ்கி கப்பல்களின் மேற்புறத்தில் ஒன்றும் இருக்காது.வீரர்கள் கடலில் விழும் வாய்ப்பு மிக அதிகமாகும்.

நிலைமை இப்படியிருக்க, அப்போது சானலில் நுழைந்ததும் கொந்தளிப்பு காரணமாக ஒரு மிகப்பெரிய அலை கப்பலின் மீது மோதியது.அப்போது சிறப்பு பணி குழுவின் உறுப்பினர் Leading Sea Man ஷாம்பிர் சிங்கை அந்த அலை அடித்து கடலுக்கு எறிந்துவிட்டு சென்றது. இதை சக வீரர்கள் கண்டனர். ஆனால் மிக மிக இருட்டாக இருந்த காரணத்தினால் கடலுக்குள் அவர் எங்கே விழுந்தார் என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை.

பின்னர் கடும் அலைகளுக்கு இடையே கப்பலில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் இருப்பதை கண்டனர். அடுத்த சில நொடிகளில் மீண்டும் அலைகள் அடிக்க அவர் இருட்டிற்கு இடையே மறைந்து போனார், சக வீரர்கள் இதனை அதிகாரிகளுக்கு தெரிவிக்க கடலில் விழுந்தவர் கப்பலின் Propeller எனப்படும் உந்துசூழலியில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கப்பல் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து வீரர்கள் கப்பலில் இருந்த அனைத்து டார்ச் மற்றும் விளக்குகளை கொண்டு வந்து கப்பலை சுற்றி தேடுதலை தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீர்மூழ்கி கப்பல் கடும் போக்குவரத்து நெரிசல் கொண்ட மும்பை சானலில் அலைகளுக்கு இடையே மிதந்தும் அலைகளால் நகர்ந்தும் கொண்டிருந்தது, இந்த மும்பை சானல் வழியாக தான் துறைமுகத்தை நோக்கி கடலில் இருந்தும் கடலை நோக்கி துறைமுகத்தில் இருந்தும் கப்பல்கள் பயணிப்பது வழக்கம் ஆகவே வேறு கப்பல்களில் ஷாம்பிர் சிங் சிக்கும் அபாயமும் இருந்தது.

வீரர்கள் அனைவரும் தங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சப்தமிட்டு ஷாம்பிர் சிங் ஷாம்பிர் சிங் என அழைத்தனர் எந்தவித பதிலோ அல்லது அடையாளமோ தெரியாத நிலையில் கப்பலின் CO – Commanding Officer கட்டளை அதிகாரி இந்த சம்பவத்தை மேற்கு பிராந்திய கடற்படை தலைமையகத்திற்கு அறிவிக்க முடிவு செய்தார்.

ஷாம்பிர் சிங்கின் கஷ்டங்கள்; கடலில் விழுந்த ஷாம்பிர் சிங்கை அலைகளும் சானலின் நீரோட்டமும் கப்பலில் இருந்து தூரமாக அடித்து சென்றது முதலில் மழை அலைகள் நீரோட்டம் காரணமாக நீர்பரப்பிற்கு மேலே மிதக்கவும் மூச்செடுக்கவும் தடுமாறிய அவர் பின்னர் படிப்படியாக சூழலை சமாளித்து கொண்டார்.

தொலைவில் இருந்த ஷாம்பிர் சிங் அவ்வப்போது அலைகளுக்கு இடையே மறைந்தும் அவ்வப்போது சிறு புள்ளியாக தெரிந்த தனது கப்பலை நோக்கி தன் முழு பலத்தையும் திரட்டி நீந்த தொடங்கினார், கடுமையான நீரோட்டம் மற்றும் காலநிலையை எதிர்த்து நீந்துவது அவருக்கு மிக கடினமாக இருந்தது.

அதே நேரத்தில் கப்பலின் உந்துசூழலியில் சிக்கினால் தனது உடலை அது துண்டு துண்டாக வெட்டிவிடும் என்பதால் கப்பலில் இருந்து நீங்கி கப்பலின் முன்பகுதியை நோக்கி நீந்தினார், ஆனால் நீந்த நீந்த அலைகளும் நீரோட்டமும் கடுமையாக எதிர்த்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீந்தினார். மேற்குறிப்பிட்டபடி அனைவரும் நம்பிக்கை இழந்த நிலையில் ஷாம்பிர் சிங் அவர்களின் கண்களில் தென்பட்டார்.

காலநிலை சார்ந்த கொந்தளிப்பு காரணமாக கப்பல் அங்கும் இங்கும் மிக கடுமையாக ஆடிக்கொண்டு இருந்த நிலையில் அவரை கயிரை எறிந்து இழுத்து கப்பலில் அவரது சகாக்கள் கொண்டு வந்தனர்.இப்படி கடுமையான சூழலில் தான் நீர்மூழ்கி படையினர் பணியாற்றி வருகின்றனர் பலர் இப்படியான சம்பவங்களில் வீரமரணம் அடைந்தும் உள்ளனர்.

இந்த கதை சந்தீப் சத்கார் எனும் இந்திய கடற்படை பொறியியல் அதிகாரியால் வெளிவந்து ஒய்வு பெற்ற கடற்படை இடைநிலை அதிகாரியான Petty Officer மணன் பாட் அவர்களால் ட்விட்டரில் பகிரப்பட்டது கூடுதல் தகவல் ஆகும்.