இந்திய கடற்படையின் செல்ல பிராணியாக இருந்த கரடியின் சுவாரஸ்யமான கதை !!
பொதுவாக தரைப்படைகளில் ரெஜிமென்ட்டுகள் மற்றும் பட்டாலியன்களில் அவற்றின் அடையாளமாக ஒரு விலங்கு வளர்க்கப்படும் அவை அந்த ஒட்டுமொத்த ரெஜிமென்ட் அல்லது பட்டாலியனுக்கும் செல்லபிராணியாக இருக்கும் இது ஒரு பாரம்பரிய வழக்கமாகும் ஆனால் விமானப்படை மற்றும் கடற்படையில் இத்தகைய பாரம்பரியத்தை காண்பது மிக மிக அரிதாகும்.
இன்று அப்படிப்பட்ட ஒரு அரிதான கதையை அறிந்து கொள்ளலாம், இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் படைப்பரிவின் அடையாளமாக இப்படி ஒரு செல்லப்பிராணி இருந்தது அது ஒரு பெண் கரடியாகும், இதன் பெயர் கிரிஜா ஆகும்.
1971ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரத்தில் அமைந்துள்ள
இந்திய கடற்படையின் முதலாவது மற்றும் முதன்மையான தளமான INS VIRBAHU விர்பாகுவில் இந்திய கடற்படையின் இரண்டாவது நீர்மூழ்கி கப்பலான INS KHANDERI காந்தேரி எனும் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து வாங்கப்பட்ட Foxtrot ரக நீர்மூழ்கி நிலைநிறுத்தப்பட்டு இருந்தது.
இதில் பணியாற்றிய மாலுமி ஒருவர் வார கடைசியில் அருகேயுள்ள காட்டுபகுதியில் மலையேற்றம் சென்ற போது ஒரு கரடி குட்டியை கண்டு அதனை தளத்திற்கு கொண்டு வந்தார் ஆனால் அதன் பசிக்கு ஏற்ற உணவு கொடுக்க முடியாமல் திணறிய அவர் தனது மேலதிகாரியை சந்தித்து இந்த கரடியை பற்றி கூறினார் அப்போது அதற்கு அந்த அதிகாரி ஒரு தீர்வை கண்டுபிடித்தார்.
உடனடியாக தளத்தில் கடற்படை பணிமனையின் மூலமாக ஒரு கூண்டு செய்யப்பட்டது அதன் புகைப்படம் இணைக்கப்பட்டு உள்ளது, மேலும் கடற்படையினர் மலைகளின் மகள் என பொருள்படும் வகையில் கிரிஜா என பெயர்சூட்டினர் விரைவில் அந்த கரடி கடற்படையினரின் செல்லமாக மாறியது.
இதற்கிடையே ஒரு சில குறும்புக்கார மாலுமிகள் புகைப்பிடிக்க கற்று கொடுக்க கிரிஜா தனது கூண்டில் ஒரு பைப்பை வைத்து கொண்டு அவ்வப்போது தனது மனதின் நிறைவுக்கேற்ப புகைப்பிடிப்பதை வழக்கமாக்கியது, தளத்தில் மிகவும் சுதந்திரமாக சுற்றி வந்த கிரிஜாவை வெளியாட்கள் மட்டும் காணும் போது பயப்பட்டனர் மற்றவர்களுக்கு செல்லப்பிராணியாகும்.
அதை போல காத்திருப்பில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு குற்றங்கள் புரிந்தோர் மற்றும் மனுதாரர்கள் ஆகியோருடனும் கிரிஜா போய் இருப்பது வழக்கம் மேலும் தளத்தில் வைக்கப்பட்டு இருக்கும் செடி தொட்டிகளை கவிழ்ப்பது கிரிஜாவுக்கு பிடித்தமான பொழுதுபோக்காகும்.
ஆகவே மேலதிகாரிகள் கிரிஜாவுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் விதமாக அணிவகுப்பை கற்று கொடுக்க உத்தரவிட்டனர் ஆனால் இசை வாத்தியங்களின் சப்தத்தை கேட்டதும் மதம் பிடித்ததை போன்ற நிலைக்கு சென்றதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது கிரிஜா தொடர்ந்து அனைவராலும் நேசிக்கப்பட்டது.
கடற்படை தளத்தில் வசிக்கும் கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குழந்தைகளுடன் தற்போது அணிவகுப்பு மைதானமாக மாற்றப்பட்டுள்ள அன்றைய நீச்சல் குளத்தில் நீச்சலடித்து விளையாடி வந்தது.
பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து 1974 ஆம் ஆண்டு கிரிஜா மரணத்தை தழுவியது தொடர்ந்து கடற்படையினர் சோகத்துடன் எரு நீர்மூழ்கி வீரருக்கு வழங்கப்படும் முழு ராணுவ மரியாதையுடன் தளத்தில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது அங்கு இப்போது ஒரு கல்வெட்டு என்று வைக்கப்பட்டுள்ளது.