இங்கிலாந்தின் புதிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவணங்கள் கழிவறையில் கண்டுபிடிப்பு !!

  • Tamil Defense
  • May 4, 2023
  • Comments Off on இங்கிலாந்தின் புதிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவணங்கள் கழிவறையில் கண்டுபிடிப்பு !!

இங்கிலாந்து கடற்படையின் புத்தம் புதிய அதிநவீன அணுசக்தியில் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான HMS ANSON தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒரு கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

அதாவது கம்ப்ரியா, பாரோவ் பகுதியில் அமைந்துள்ள Furness Railway நிறுவனத்தின் கழிவறையில் இந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது, அவற்றில் கப்பலின் ஹைட்ராலிக், நீரடிகணை அமைப்பு, ஸ்டியரிங், மிதவை மற்றும் மூழ்கும் அமைப்பு போன்றவை தொடர்பான தகவல்கள் இருந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட ரயில்வே நிறுவனத்தின் பாரில் உள்ள கழிவறையில் கிடந்த இந்த ஆவணங்கள் ஒரு கடற்படை சீருடையின் பாகமான தோள்கயிறுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அனேகமாக ஏதேனும் உயர் அதிகாரி குடிபோதையில் விட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த பாரில் இருந்து மிக அருகில் தான் மேற்குறிப்பிட்ட ASTUTE ரக நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் BAE கப்பல் கட்டுமான தளம் அமைந்துள்ளது, ஆகவே இந்த பாருக்கு கடற்படை மற்றும் கப்பல் கட்டுமான தள பணியாளர்கள் அதிகளவில் வருவது வழக்கமாகும்.

இந்த ASTUTE ரக நீர்மூழ்கி கப்பல்களில் Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளும், Spearfish கனரக நீரடிகணைகளும் உள்ளன, மேலும் இந்த கப்பல்கள் சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பாமலேயே பயணிக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

இந்த கப்பல்கள் உள்ளேயே தேவையான ஆக்ஸிஜன் மற்றும் குடிநீரை தயாரித்து கொள்கின்றன ஆகவே உணவு நிரப்பி கொள்ள மட்டுமே பயணத்தை நிறுத்த மேலே வர வேண்டி அவசியம் உள்ளது இங்கிலாந்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடையாளமாக இந்த கப்பல்கள் பார்க்கப்படுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்கானிஸ்தான் படைவிலக்கத்திற்கு பிறகு இங்கிலாந்து சிறப்பு படைகள் ஆஃப்கானிஸ்தானில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய ரகசிய ஆவணங்கள் கென்ட் நகரில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றின் அருகில் ஈரமான குப்பை குவியலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.