உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ள T-14 அர்மாட்டா டாங்கிகள் ரஷ்யா !!

  • Tamil Defense
  • May 3, 2023
  • Comments Off on உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ள T-14 அர்மாட்டா டாங்கிகள் ரஷ்யா !!

ரஷ்யாவின் RIA ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் ரஷ்யாவின் சூப்பர் டாங்கி என அழைக்கப்படும் அதிநவீன T-14 Armata டாங்கிகள் உக்ரைன் போரில் களமிறக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

அதாவது இந்த டாங்கிகள் களமுன்னனிக்கு அருகாமையில் இருந்து காலாட்படைக்கு உதவியாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதே நேரத்தில் இவற்றை உக்ரைன் நிலைகளுக்கு அருகில் சென்று நேரடி தாக்குதல் நடத்தும் பணிகளில் ஈடுபடுத்தவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டாங்கிகளை பற்றி ரஷ்யா 2012 முதலாகவே உயர்வாக கருத்துக்களை வெளியிட்டு வந்தது, 2020 வாக்கில் இத்தகைய 2300 டாங்கிகளை படையில் இணைக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது வரை 40 டாங்கிகளை மட்டுமே தயாரித்துள்ளதாக தெரிகிறது மேலும் இவற்றின் பலம் பலவீனம் பற்றி அறிந்து கொள்ளவே தற்போது போரில் களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டாங்கிகளில் ஒன்றுகூட உக்ரைன் தரப்பால் அழிக்கப்பட்டாலும் அது ரஷ்யா உருவாக்கிய பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து விடும் ஆகவே ரஷ்யா நேரடி சண்டையில் இவற்றை ஈடுபடுத்தாமல் முடிந்த அளவுக்கு பாதுகாப்பாக பயன்படுத்தி வருவதை தான் திட்டமாக கொண்டுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.

உக்ரைனும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் அதிநவீன சேலஞ்சர் மற்றும் ஏப்ரம்ஸ் ரக டாங்கிகள் மற்றும் அவற்றுடன் பயன்படுத்தப்பட்ட யூரேனிய கவச துளைப்பு குண்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.